×

மரத்தில் மோதி ஏரியில் கவிழ்ந்த கார்- 7 பேர் உயிரிழப்பு

 

தெலங்கானா மாநிலம் சிவம்பேட்டை பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ஷிவம்பேட்டையில் எடுலாபூர் கிராமத்தின் புறநகரில் சாலையோர மரத்தில் கார் மோதி கால்வாயில் கவிழ்ந்ததில் மூன்று இளைஞர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார். உயிரிழந்தவர்கள் ஷிவம்பேட்டையில் வசிக்கும் தனவத் சிவராம்(55), தனவத் துர்கி என்ற துர்கம்மா (45), மாலோத் அனிதா (30), மாலோத் பிந்து (14), மாலோத் சிரவாணி (12), குக்லோத் சாந்தி (45), குக்லோத் மம்தா (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓட்டுநர் குக்லோத் நாம் சிங் (55) படுகாயங்களுடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.  உறவினரின் சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பும்போது விபத்து நேர்நந்தள்ளது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், 7 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

விபத்து குறித்து போலீசார் கூறுகையில், “கார் அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. மோதியதில், பக்கவாட்டில் உள்ள கால்வாயில் விழுந்தது. ஹேட்ச்பேக் அதிக சுமையுடன் இருந்ததே கார் கவிழ காரணம். விபத்தில் பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் இறந்ததற்கு நீரில் மூழ்கியதே காரணம்” எனக் கூறினர்.