”திருப்பதி லட்டில் விலுங்கு கொழுப்பு- சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்யத் தயாரா?”
திருப்பதி லட்டு தயாரிப்பு குறித்து குற்றம்சாட்டிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பியுமான சுப்பா ரெட்டி சவால் விடுத்துள்ளார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்தது. இதனை ஒட்டி நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னப்பிரசாதங்கள் கூட தரமற்ற பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. லட்டு பிரசாதம் செய்வதற்கு பயன்படுத்தும் நெய்க்கு விலங்குகள் கொழுப்பு கலப்பிடம் செய்யப்பட்ட நெய் பயன்படுத்தபட்டது. தற்போது அனைத்தையும் மாற்றி தரமானவை கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டேன். அதன்படி தற்பொழுது தரமான நெய் கொள்முதல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தரமான மற்றும் சுவையான பிரசாதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஏழுமலையான் கோயில் இருப்பது நமக்கு கிடைத்த பாக்கியம். உலகத்தில் உள்ள அனைவரும் இங்கு வருகிறார்கள் எனவே அந்த புனித தன்மையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது” என பேசினார்.
சந்திரபாபு நாயுடு பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பியுமான சுப்பா ரெட்டி, “சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி கோயிலின் புனிதத்தையும், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையையும் காயப்படுத்தியுள்ளார். பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த நானும், எனது குடும்பத்தினரும் கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு சத்தியம் செய்வாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.