×

பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கு - இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.. 

 


 கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து இன்று விசாரிக்கிறது.  


மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு படித்துவந்த பெண் பயிற்சி மருத்துவர், கல்லூரி கருத்தரங்கு அறையில்  ஆக.8 ம் தேதி  இரவு பணியில் இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.  ஆக. 9ம் தேதி அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி சந்தேகத்தின் அடிப்படையில்  சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டர்.  இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர்,  இதில்  பலருக்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.  

இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்தும்,  பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டும், சமரசமற்ற விசாரணை நடத்தக்கோரியும் மாணவர்களும் , மருத்துவர்களும்  நாடு முழுவதும் தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 17ம் தேதி நாடு முழுவதும் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டமும் நடைபெற்றது.  அதேவேளையில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அரசு தரப்பிலோ அதிகாரிகள் தரப்பிலோ தங்களுக்கு எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.  

இந்த நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது.  அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது. நீதிமன்றம் தொடங்கியதும் முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.  வழக்கு விசாரணையின் நிலை, மேற்கு வங்க அரசின் செயல்பாடுகள், மாநில போலீஸாரின் முதல்கட்ட விசாரணை ஆகியவை குறித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து உச்சநீதிமன்றம் விரிவாக விசாரணை நடத்தும் எனவும், முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.