பள்ளி கட்டடம் அமைக்க அனுமதி கிடைக்காததால் ரூ.13 லட்சத்தில் கண்டெய்னர் பள்ளி அமைத்த மாவட்ட ஆட்சியர்
தெலங்கானாவில் பழங்குடியின மக்கள் வாழும் பங்காருபள்ளி கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பள்ளி கட்டடம் அமைக்க வனத்துறை அனுமதி வழங்காததால், கலெக்டர் நிதியில் இருந்து ரூ.13 லட்சம் எடுத்து, மாநிலத்தின் முதல் கண்டெய்னர் பள்ளியை அமைத்த மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவின் முதல் கண்டெய்னர் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. முலுகு மாவட்டம் கன்னாயகூடம் மண்டலம் பங்காருபள்ளி கோத்திகோயகும்பு வனப்பகுதியில் பழங்குடியினத்தவர் கிராமம் உள்ளது. இங்குள்ளவர்களின் பிள்ளைகள் பள்ளி செல்ல வேண்டுமென்றால் பல கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். அங்கு நிரந்தர கட்டிடங்களை அமைக்க அரசு முன்வந்தாலும் இந்த கிராமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்ட வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் கலெக்டர் திவாகர் புதுமையாக ஆலோசித்து கன்டெய்னர் பள்ளியை துவக்கி வைத்தார்.
இதற்காக கலெக்டர் நிதியில் இருந்து ரூ.13 லட்சத்தில் 12 இரட்டை மேசைகளுடன் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அமர்வதற்கு 3 நாற்காலிகள் அமைக்கப்பட உள்ளது. இந்த கண்டெய்னர் 25 அடி அகலமும் 25 அடி நீளமும் கொண்டதாக அமைக்கப்பட்டது. இதனை பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சீதக்கா தொடங்கி வைத்து பள்ளியில் மாணர்களுக்கு ஏபிசிடி என எழுதி மாணவர்களுக்கு பாடன் சொல்லிக்கொடுத்து ஆசிரியையாக செயல்ப்பட்டார். கல்வி மட்டுமே வாழ்க்கையில் அனைவரையும் முன்னேற்ற பாதைக்கும் சமநிலையை கொண்டு செல்லும். எனவே அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கானா மாநில அரசு பழங்குடியினர் வாழும் இந்த பகுதியில் வனத்துறை அனுமதி இல்லாததால் பள்ளி கட்டிடம் கட்ட முடியாமல் போனது. எனவே இங்கு கண்டெய்னர் மூலம் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
வருங்காலத்தில் இதேபோன்று எந்த இடத்தில் பள்ளி கட்டிடம் கட்ட முடியாத சூழல் உள்ளதோ அங்கு இதே போன்று நவீன வசதிகளுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்துடன் பல இடங்களில் திறக்கப்படும் என அவர் தெரிவித்தார்.