×

திருப்பதி லட்டு சர்ச்சை- பாவ மன்னிப்பு கேட்க இன்று முதல் 11 நாட்கள் பவன் கல்யாண் விரதம்

 

திருப்பதியில் லட்டு கலப்படம் குறித்த அமைச்சரவையிலும், சட்டசபையிலும் விவாதிக்க வேண்டும் என ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.


திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு  பிரசாத நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏழுமலையானுக்கு மன்னிப்பு கேட்டு துணை முதல்வர் பவன் கல்யாண் இன்று முதல் 11 நாட்கள் பரிகார விரதத்தை தொடங்கினார். குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்து பவன் கல்யாண் தனது விரதத்தை தொடங்கினார். பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய   பவன் “அரசுகளை குறை சொல்லவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ நான் இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் கோயில்களில்  பூஜை நடைமுறைகளை மாற்றிவிட்டார். ஸ்ரீ வாணி அறக்கட்டளையின் பெயரில் டிக்கெட் ரூ.10 ஆயிரத்திற்கு டிக்கெட் விற்கப்பட்டது. மாநிலம் முழுவதும்  பல கோயில்கள் இடித்தும், தேர் தீ வைத்து எரிக்கப்பட்டு, 300 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன.

எந்த மதமாக இருந்தாலும் எந்த வழிபாட்டுத் தலமாக வேண்டுமானாலும் இருக்கலாம். மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது, பிரசாதத்தில் கலப்படம் இருக்கிறது. தரம் சரியில்லை என்று முன்பே கூறி வந்தோம். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பல நூற்றாண்டுகளாக இருக்கும் பிரசாதம் விநியோக முறையில் இந்த அளவில் கலப்படம் நடப்பதாக நான் நினைக்கவில்லை.. பல ஆண்டுகளாக போராடி அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவிற்கும்  கலப்படம் செய்யப்பட்ட லட்சம் லட்டுகள்   அனுப்பப்பட்டது மிகவும் கொடுமை. அரசியல் ஆதாயத்துக்காக இதை இவ்வாறு கூறுவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.  உங்கள் ஆட்சியில் ராமர்  சிலை உடைக்கப்படும் போதும் நான்  சாலையில் இறங்கி போராடினேன். 

மத வழிப்பாட்டு தளத்தில் கோயில், சர்ச், மசூதி என எங்கிருந்தாலும் தாக்குதல்கள் நடக்கும் போது வேடிக்கை பார்க்க கூடாது. தர்மத்தை கெடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மத வழிபாட்டு முறையை கடைப்பிடிப்பது அவர்கள் ஜனநாயக உரிமை இதில் யாரும் தலையிட முடியாது. அந்தந்த மத உணர்வுகளுக்கும் கலாச்சாரத்திற்கும் மதிப்பளித்து கௌரவத்துடன் செயல்பட வேண்டும். பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக நாங்கள் கூறினால்  அறங்காவலர் குழுவில் இருந்த ஒய்.வி.சுப்பாரெட்டியும், தர்மா ரெட்டியும் இருந்த வாரியம் என்ன செய்தது..?  இப்போதாவது தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என கூறாமல் அரசியல் செய்வதாக எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள். 

சர்ச், மசூதியில் நடந்தால் உலகமே விவாதிக்க கூடிய நிலையில்  இந்துக்களுக்கு என்றால் அமைதியாக இருக்க வேண்டுமா?  இந்து மதத்திற்கும் எதாவது நடந்தால் குரல் கொடுக்க வேண்டும் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும். எந்த மதத்திற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் அதன் உணர்வுகளை புண்படுத்தினால் வேடிக்கை பார்க்க முடியாது. சனாதன தர்மம் ஒருவரால் தொடங்கப்பட்டது அல்ல நம் நாட்டில்  அனைத்து மதங்களும் ஒன்றிணைந்த களம் அவற்றை கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பிரசாதத்தில் கலப்படம் செய்த  குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.  திருமலை லட்டு கலப்பட விவகாரத்தை அமைச்சரவையிலும், சட்டசபையிலும் விவாதிக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுக்க வேண்டும். குறைந்த விலையில் நெய் தருவதாக கூறிய இடைத்தரகர்களை கண்டுபிடிக்க வேண்டும்.  

சுவாமி பிரசாதத்தில் கலப்படம் இருந்தால் தேவஸ்தானத்தில் பணியில் இருந்த  அதிகாரிகளும், நிர்வாக குழு  உறுப்பினர்களும் பேசாதது ஏன்..? ஊழியர்கள் மெத்தனமாக இருந்து பெரும் பாவம் செய்து விட்டனர். எனவே இந்த பாவத்திற்கு நான் துணை இல்லாவிட்டாலும்  இவ்வாறு நடந்ததை மன்னிக்க வேண்டும் என 11 நாள் தீட்சை விரதத்தை இன்று தொடங்கியுள்ளேன்” என்றார்.