×

துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் தீ பிடித்து பயங்கர விபத்து

 

கர்நாடகாவில் தீபாவளி பூஜையின் போது உடுப்பி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் தீ பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. 7 படகுகள் 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசம் 8 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுக்காவில் உள்ள கங்கொலி துறைமுகத்தில் இன்று நூற்றுக்கணக்கான மீனவர்கள் தங்களது படகுகளுக்கு தீபாவளி பூஜை நடத்தினர். துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் கடலில் நிறுத்தாமல் பூஜைக்காக தரையில் நிறுத்தப்பட்டிருந்தன. பூஜையின் போது திடீரென தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகில் தீ பற்றி கொண்ட நிலையில் மலமலவென்று அருகில் இருந்த படகுகளுக்கும் தீ பரவ ஆரம்பித்தது. பொதுமக்கள் சுதாரித்துக் கொள்வதற்கு முன்பு பலத்த காற்றின் காரணமாக நெருப்பு ஏழு படகுகளில் பற்றி கொண்டு கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. 

பொதுமக்கள் ஒருபுறம் தீயை அணைக்க போராடிக் கொண்டிருந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள் 2 மணி நேரம் போராடி நெருப்பை அணைத்தனர். கிரேன் வாகனங்கள் மூலம் சில படகுகளை மீனவர்கள் தூக்கி வேறு இடத்தில் வைத்து தீ விபத்தில் இருந்து தங்களது படகுகளை காப்பாற்றினார். இந்த தீ விபத்தில் ஏழு மீன்பிடி படகுகள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசம் ஆகி உள்ளது. இதன் மதிப்பு சுமார் எட்டு கோடி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீ விபத்து காரணம் குறித்து பைந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.