×

ஜெய்ப்பூரில் ரூ.300 நகையை ரூ.6 கோடி கொடுத்து வாங்கிய அமெரிக்க பெண்!

 

அமெரிக்காவில் வசிக்கும் செரிஷ் என்பவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ஜோஹ்ரி பஜாரில் உள்ள ஒரு கடையில் ரூ.300 நகையை ரூ.6 கோடி கொடுத்து வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த செரிஷ்க்கு, கடந்த 2022ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கவுரவ் சோனி என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அப்போது தான் ஜெய்ப்பூர் ஜோஹ்ரி பஜாரில் தங்க நகைக்கடை வைத்திருப்பதாக கவுரவ் சோனி தெரிவித்துள்ளார். இதனை அறிந்தவுடன் செரிஷ் அவரிடம் தங்க நகைகள் வாங்க முயன்றுள்ளார். சோனியிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நகையை செரிஷ் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.300 தான். ஆனால் அதனை ரூ.6 கோடி கொடுத்து வாங்கியுள்ளார் செரிஷ்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற கண்காட்சியில் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டபோது ​​அது போலியானது என செரிஷ்க்கு தெரியவந்தது. உடனே ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு வந்த அவர், கவுரவ் சோனியிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் சோனி, “நீங்க யாரு? நீங்க என்னிடம் நகை வாங்கவில்லையே” எனக் கூறியுள்ளார். இதையடுத்து அமெரிக்க பெண் ஜெய்ப்பூர் போலீசில் புகார் அளித்தார். மேலும் அவர் அமெரிக்க தூதரகத்தின் உதவியையும் நாடியுள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள கவுரவ் சோனி மற்றும் அவரது தந்தை ராஜேந்திர சோனியை தேடி வருகின்றனர்.