×

திருப்பதி தேவஸ்தான வருவாயில் 1 சதவீதத்தை திருப்பதி நகர வளர்ச்சிக்கு பயன்படுத்த முடிவு 

 

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்  கருணாகர் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து  செய்தியாளர்களிடம் பேசிய கருணாகர் ரெட்டி, “அலிபிரி கருடா சந்திப்பு அருகே 2 ஏக்கரில் உள்ள வாகன நிறுத்தும் பார்கிங் இடம் 12 ஏக்கராக விரிவாக்கம் செய்து பஸ், கார், உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தவும் 3 இடங்களில் பக்தர்கள் சமையல் செய்து கொள்வதற்கான வசதிகள், கழிவறைகள் அமைக்கப்பட உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருமலை மட்டும் அல்லாது திருப்பதியுடன் சேர்ந்த நிர்வாகமே என்பதால்  ஆண்டிற்கு ரூ.4,000 கோடி வருவாய் உள்ள தேவஸ்தான பட்ஜெட் உள்ள நிலையில்  திருப்பதி நகர வளர்ச்சிக்கு  1 சதவீதம் நிதி ஆண்டுதோறும்  திருப்பதி மாநகராட்சிக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினந்தோறும் திருப்பதி நகருக்கு பல லட்சம் பக்தர்கள் வந்து செல்லக்கூடிய நிலையில் திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான  கோவில்கள் , கல்வி நிறுவனங்கள் மற்றும் பக்தர்கள் பயன்படுத்தும் சாலைகளில் சிறந்த சுகாதார மேலாண்மைக்காக தூய்மை பணிகளை தேவஸ்தானமே ஏற்று மேற்கொள்ளப்படும். திருப்பதி  தேவஸ்தானத்தில் பணி புரியும் துப்புரவு பணியாளர்களின் சம்பளத்தை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள உயர்வு செய்யப்படும்.


தேவஸ்தானத்தின்  கீழ் ஸ்ரீ லட்சுமி ஸ்ரீநினிவாச கார்ப்ரேஷன்  ஒப்பந்த  பணியாளர்களின்  சம்பளத்தை ஆண்டுதோறும் 3 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த முறையில் பணிபுரியும் ஊழியர்கள் அகால மரணம் அடைந்தால் அவர்களுக்கு கருணைத்தொகையாக ரூ.2 லட்சம்  வழங்கப்படும். ஒப்பந்த பணியாளர்களில் இ.எஸ்.ஐ. கீழ் வராதவர்களுக்கு காப்பீட்டு திட்டம்  கொண்டு வரப்படும். நாராயணகிரி பூங்காவில் வரிசைகள், உணவு கவுண்டர்கள் ரூ.18 கோடியில்  அமைக்கப்படும். ரூ. 40 கோடி செலவில் ஆகாச கங்கை நந்தகம் ஓய்வறை வரை உள்ள தற்போதுள்ள இருவழிச்சாலை வெளிவட்டச் புறவழிச்சாலையாக நான்கு வழிச் சாலையாக மாற்றப்படும். ரூ. 10.8 கோடி செலவில் வராகசுவாமி ஓய்வறை  முதல் வெளிவட்டச் சாலை வரை நான்கு வழிச் சாலை அமைக்கப்படும்.

தேவஸ்தானத்திற்கு சொந்தமான பல நூற்றுண்டுகளுக்கு முன்பு கட்டிய பழமை வாய்ந்த கோவில் கோபுரங்கள் வலுவாக உள்ளதா என கண்காணிக்க வல்லுனர்கள் கொண்ட குழுவை அமைத்து தேவைப்பட்டால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். திருப்பதியில் செர்லோபள்ளி முதல் சீனிவாச மங்காபுரம் வரை உள்ள இருவழிச்சாலை நான்கு வழிச்சாலை 25 கோடி செலவில் விரிவாக்கம் செய்து அமைக்கப்படும்.  தேவஸ்தானத்திற்கு சொந்தமான கல்யாண மண்டபங்களில் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளின்  போது சினிமா பாடல்கள் இல்லாமல் உள்ளிட்ட 21 நிபந்தனைகள் கடைப்பிடித்தால் மட்டுமே வாடகைக்கு   அனுமதிக்கப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தான  ஆஸ்தான வித்வான் கரிமெல்லா பாலகிருஷ்ண பிரசாத்திற்கு பத்மஸ்ரீ விருது வழங்க மத்திய அரசுக்கு அறங்காவலர் குழு பரிந்துரை செய்யப்படும்” என்றார்.