×

பீகார் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு -  தப்புமா
 நிதிஷ் குமாரின் ஆட்சி?

 

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், முதலமைச்சர் நிதிஷ் குமார் அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் மீண்டும் கைக்கோர்த்தார். இதையடுத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ் குமார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனது கட்சியுடன் இணைந்ததை அடுத்து, 9வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். 

இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ளது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 128 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக நிதிஷ் தெரிவித்துள்ளார்.