×

பெண் மருத்துவர் கொலை வழக்கு : மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரி கேள்வி..  

 

பெண் மருத்துவர் கொலை வழக்கில், மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சரமாரி கேள்விகளை எழுப்பினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறும் கேட்டுக்கொண்டனர்.  

மேற்கு வங்கம் மாநிலம்  கொல்கத்தாவில்  பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து இன்று விசாரித்தது.  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான  நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.  

அப்போது சம்பவம் நடைபெற்றது அறிந்த பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அதனை தற்கொலை என மூடி மறைப்பதற்கு பார்த்துள்ளது;  , நள்ளிரவு வரை முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை !, பின்னர் எஃப்.ஐ.ஆரில் கொலை என்று பதியப்படவில்லை; அப்பெண்ணின் உடலை பார்க்க பெற்றோருக்கு அனுமதி வழங்கப்படவில்லை; மருத்துவமனை இயக்குனர் எவ்வாறு இதை தற்கொலை என கடந்து போக முற்பட்டார் ? மருத்துவமனை இயக்குனர் எப்போது இந்த வழக்கில் சேர்கப்பட்டார் ? ஒரு கூட்டம் உள்ளே புகுந்து இடத்தை சேதப்படுத்தும் வரை போலீஸ் என்ன செய்து கொண்டிருந்தது? ஏன் இந்த அலட்சியம்?  என மேற்குவங்க அரசுக்கு அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்தனர்.  

இந்த வழக்கை தானா முன்வந்து விசாரணைக்கு எடுத்ததற்கு காரணம், பாலியல் கொலை மட்டுமல்ல;  நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் கருத்தில் கொள்ளவே என்றும் ,  நாடு முழுவதும்  பணிபுரியும் பெண் மருத்துவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு குறித்து நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகள் இல்லாதது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம் என்றும், ஆண் மற்றும் பெண் மருத்துவர்களுக்கான தனி ஓய்வு மற்றும் பணி அறைகள்  பாதுகாப்பான பணி சூழல் தொடர்பாக நிலையான தேசிய நெறிமுறைக்கான தேசிய அளவில் ஒருமித்த நடைமுறையை நாம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.   

மேலும், பெண்கள் தங்கள் பணியிடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியாவிட்டால் அரசியலமைப்பின் கீழ் சமத்துவம் என்பதற்கான அர்த்தம் என்ன ? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி,  மருத்துவர்கள் மீதான தாக்குதல். என்பது ஒரு நிர்வாக தோல்வி என்று கூறினர்.  மருத்துவர்களை நோயாளிகளின் உறவினர்கள் தாக்குவது என்பதே  அவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதை எடுத்து காட்டுகிறது என்றும், குறிப்பாக பெண் மருத்துவர்கள் மீதான பாலியல் சீண்டல், கொடுமை என்பது பாலின வன்முறை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை தெளிவாக எடுத்து காட்டுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 


இதனையடுத்து  மருத்துவர்கள் மற்றும்  செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 மருத்துவர்கள் கொண்ட தேசிய அளவில் ஒரு குழுவை அமைக்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், அவர்கள் நாடு முழுவதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பரிந்துரைப்பார்கள் என்று தெரிவித்தனர்.  மருத்துவர்கள் தங்கள் பணிச்சூழலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும்,  தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் பணியைத் தொடருமாறு கேட்டுக்கொண்டனர்.   மருத்துவர்களின் பாதுகாப்பது என்பது தேசிய நலன் சார்ந்த விஷயம்  எனவும், அதற்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்  குறிப்பிட்டனர். 

மருத்துவ நிபுணர்களைப் பாதுகாக்க மாநிலத்தில் உள்ள  சட்டங்கள், முறையான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி, மருத்துவர்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை; மருத்துவர்கள் நீண்ட பணிநேரம் முடித்து வீடு திரும்புவதற்கு  போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை; மருத்துவமனைகளில் முறையாக செயல்படும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லை; மேலும் மருத்துவமனையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கண்டறியும் ஸ்கிரீனிங் இயந்திரம் இல்லை என்று வருத்தம் தெரிவித்தனர்.  மேலும், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல். கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்றும்  சி.பி.ஐக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.