×

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை! ஆந்திராவில் பரபரப்பு

 

ஆந்திராவில் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இளைஞரணி தலைவர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்த தெலுங்கு தேச கட்சி நிர்வாகியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில் உள்ள அரசு மதுபான கடையில்  கேஷியராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  ஷேக் ரஷீத் (25)  பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பணி முடிந்து இரவு பைக்கில் வீட்டிற்கு சென்ற போது  அதே ஊரை சேர்ந்த ஷேக் ஜிலானி என்ற தெலுங்கு தேச கட்சி நிர்வாகி  ஷேக் ரஷீத் வழிமடக்கி நிறுத்தி கண்முடித்தனமாக கைகளில் வெட்டினார். தன்னை விட்டுவிடும்படி கதறியும் விடாமல் வெட்டி தலையில் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் இறந்தார். தகவல் அதிந்த பல்நாடு மாவட்ட ஏஎஸ்பி லட்சுமிபதி,  நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  சாம்பசிவ ராவ் சம்பவ இடத்திற்கு வந்த சடலத்தை பார்வையிட்டு  விசாரணை நடத்தினர்.  உடல் பிரேத பரிசோதனைக்காக அப்பகுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜிலானியை கைது செய்த வினுகொண்டா போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று  வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 
இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் தெலுங்கு தேசம் கட்சி குண்டர்கள் மானுட அரக்கர்களாக மாறிவிட்டதாகவும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்  பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில்  இளைஞர் பிரிவு தலைவர் ரஷீத்தை கத்தியால் கண்மூடித்தனமாக வெட்டி கொலை செய்துள்ளனர்.   உங்களது கொலைகார அரசியலுக்கு இன்னும் எத்தனை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பலிகடா ஆக்கப்பட வேண்டும். இது போன்ற கொடுமைகள் நாட்டில் எங்காவது நடக்குமா என ஆந்திர முதல்வர் சந்திரபாபு, உள்துறை அமைச்சர் அனிதா, துணை முதல்வர் பவன் கல்யாண்,  அமைச்சர் நாரா லோகேஷ் ஆகியோருக்கு   கேள்வி எழுப்பியுள்ளனர்.