சர்வதேச மகளிர் தினம் 2023- இந்தாண்டுக்கான கருப்பொருள் என்ன தெரியுமா?
பாலின சமத்துவத்தில் தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புகளும் என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதை முன்னிறுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெண்களின் உரிமை குறித்து மக்களின் கவனத்தை ஈர்க்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதுமட்டுமின்றி பெண்களின் சாதனைகளை கெளரவிக்கவும், ஊக்குவிக்கவும் இந்த தினத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் இந்தாண்டு ‘டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருளுடன் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவமின்மை என்பது வேலை செய்யும் இடம், சம்பளம் என அனைத்திலும் மகளிருக்கு மாறுபடுகிறது. ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உழைப்பதாக சொல்கிறது ஓர் ஆய்வு. ஆனால் ஆண்களுக்கு நிகராக சம்பளம் வாங்குகிறார்களா என்பது கேள்விக்குறியே. உழைப்பு ரீதியாகவும் ஊதிய ரீதியாகவும் தொடரும் இந்த பாலின பேதத்தை கலைப்பதும், அதனை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதையே விளக்குகிறது இந்த பாலின சமத்துவம். நாளுக்கு நாள் வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், அதில் பெண்களின் பங்களிப்பையும் உணர்த்துகிறது இந்தாண்டுக்கான கருப்பொருள்.
வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில், பாலின சமத்துவம் மறைந்து பெண்களுக்கான உரிமையும், மரியாதையும் நிச்சயம் கிடைப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு டிஜிட்டல் புரட்சியைவிட சக மனிதர்களின் புரட்சியே முக்கியம். வரும்காலங்களில் டிஜிட்டல் புரட்சியின் பலனாய் மனிதம் மலர்ந்து மகளிருக்கான சம வாய்ப்பு அதிகரிக்கும்.