×

3-வது அணியால்  வெற்றிபெற முடியாது - அடித்துச்சொல்லும் பிரசாந்த் கிஷோர்
 

 

மத்தியில் மூன்றாவது அணி அமைவதற்கு பலரும் முயற்சித்து வருகின்றனர்.  குறிப்பாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி,  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர்  தீவிரமாக முயற்சித்து வருகின்றனர் என்று அடிக்கடி தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

 மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக நிபுணராக இருப்பவர் பிரசாந்த் கிஷோர்.   இவர்தான் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்றாவது அணியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உருவெடுக்க இருப்பதாகவும் அதற்கு பிரசாந்த் கிஷோர் உதவுவதாகவும் தகவல் வெளியானது.

 இது குறித்த கேள்விக்கு பிரசாந்த் கிஷோர் அளித்துள்ள பதிலில்,    ’’இங்கே எந்த ஒரு மூன்றாம் அணியும் தேர்தலில் வெற்றி பெற முடியாது.   இரண்டாவது அணியால் மட்டுமே வெற்றி பெற முடியும்.    பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சி இரண்டாவது முன்னணி கட்சியாக  உருவாக வேண்டும் .  காங்கிரஸ் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது.   ஆனால் அது இரண்டாவது அணியாக இல்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.

 அவர் மேலும்,   ’’காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் நானும் பல விஷயங்களை கலந்தாலோசித்துள்ளேன்.   அவர்களால் அவற்றை எல்லாம் செய்ய முடியும்.   அவர்களிடம் பல பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள்.  அதனால் அவர்களுக்கு நான் தேவையில்லை.   நான் கட்சியில் எந்த பங்கையும் விரும்பவும் இல்லை.   எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கமளித்து அதை செயல்படுத்த வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.

 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடிக்கு யார் சவால் விடுவார்கள் என்று தெரியவில்லை’’ என்று தெரிவித்திருக்கும் பிரசாந்த் கிஷோர்,  எதிர்காலத்தில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பில்லை என்று சொல்வது தவறாகாது.  ஆனால் சில மாற்றங்களை அக்கட்சி செய்ய வேண்டும்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.