×

கட்சிகள் கூட்டணி வைக்க கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும் - நயினார் நாகேந்திரன்

 

ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட்டணி வைக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்றார் நயினார் நாகேந்திரன்.  அதே நேரம் கூட்டணி அமைத்தால் பலமாக இருக்கும் என்றார்.

 வ. உ. சிதம்பரனாரின் 86 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் அவரது உருவ சிலைக்கு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.   இந்த நிகழ்வில் பங்கேற்ற பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.  

 அப்போது,   நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது.   ஆனாலும் அடிப்படை அமைப்பு ரீதியான பணிகளை பாஜக செய்து வருகிறது.  அதிமுக -பாஜக கூட்டணி என்பதில் எந்த வித பிரச்சனையும் இல்லை என்றார்.

 தொடர்ந்து அது குறித்து பேசிய நயினார் நாகேந்திரன்,  இரண்டு கை தட்டினால் தான் ஓசை வரும்.   அதிமுகவில் பிரிந்து உள்ளவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால் தான் அது பலம்.   அதிமுகவின் அனைத்து தரப்பும் ஒன்றாக இருந்து தேர்தலை சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். 

கூட்டணி என்பது தேர்தல் அளவிற்கு மட்டுமே தான்.  கொள்கைளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது.  தமிழகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் கூட்டணிகளின் பலத்தையே நம்பி இருக்கிறது.   தனியாக தேர்தலை சந்திப்போம் என்று எந்த கட்சியாலும் சொல்ல முடியாது என்று  சொன்னவர்,   இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட்டணி வைக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.  அதே நேரம், கூட்டணி இருந்தால் பலமாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.

மேலும் பேசிய நாகேந்திரன்,  பிரதமர் உத்தரவிட்டதன்படி தமிழக முழுவதும் 60க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் வந்து பார்த்து சென்று கொண்டிருக்கிறார்கள். மத்திய அமைச்சர்களின் வருகை தமிழகத்தில் இனியும் தொடரும் .  தொடர்ந்து கட்சி பணிகள் நடந்து வருகிறது.   உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக எதிராக முடிவு எடுத்திருக்கிறது.   நீதிமன்றத்தையும் நாடி இருக்கிறார்கள்.   தமிழக அரசின் சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.   மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழக அரசு உடனடியாக அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.