×

இமாச்சல பிரதேசத்தில் அனைத்து பள்ளிகளும் டெல்லியை போல் மாற்றியமைக்கப்படும்.. ஆம் ஆத்மியின் 5 உத்தரவாதங்கள்

 

இமாச்சல பிரதேசத்தில்  ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் டெல்லியை போல் மாற்றியமைக்கப்படும் மற்றும் மேம்படுத்தப்படும் என்பது உள்பட கல்வி தொடர்பான 5 உத்தரவாதங்களை அம்மாநில மக்களுக்கு  ஆம் ஆத்மி வழங்கியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் 68 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் இமாச்சல பிரதேச தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நேற்று ஆம் ஆத்மி கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சந்தீப் பதக் மற்றும் இமாச்சல பிரதேச ஆம் ஆத்மி தலைவர் சுர்ஜித் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்  இமாச்சல பிரதேச வாக்காளர்களுக்கு கல்வி தொடர்பான 5 வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி சார்பில் பகவந்த் மான் மற்றும் மணிஷ் சிசோடியா அளித்தனர்.

ஆம் ஆத்மியின் 5 உத்தரவாதங்கள்
1. அனைத்து இமாச்சல பிரதேச பள்ளிகளும் டெல்லியை போல் மாற்றியமைக்கப்படும் மற்றும் மேம்படுத்தப்படும்.
2. தனியார் பள்ளிகள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
3. தற்காலிக ஆசிரியர்கள் முறைப்படுத்தப்படுவார்கள்.
4. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
5. ஆசிரியர்களுக்கு ஆசிரியர் அல்லாத பணி வழங்கப்படாது.