×

ஏசிஎஸ் போட்ட ரூட்! ஓபிஎஸ் -இபிஎஸ் நேருக்கு நேர் சந்திப்பா? 

 

நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய தம்பிதுரை இன்று சென்னையில் ஓ .பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசியிருக்கிறார்.  அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க இருவருக்குமிடையே சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார் தம்பிதுரை என்கிறது அதிமுக வட்டாரம்.

பொதுக்குழுவில் பெரும் களேபரம் வெடிக்கும் என்று அதிமுகவினர் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை தீர்மானம் கொண்டுவந்தால் அது சட்டப்படி செல்லாது என்று பன்னீர்செல்வமும்,  வைத்தியலிங்கமும் சொல்லி வந்தாலும் எடப்பாடி டீம் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சித்து வருவதாக தெரிகிறது.  இதனால் பொதுக்குழுவில் பெரும் களேபரம் வெடிக்கும் என்றும் அதற்கு முன்னதாகவே எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் நேரில் சந்தித்துப் பேசினால் இந்த பிரச்சனைக்கு தீர்வு அமைந்துவிடும் என்றும் கட்சியின் சீனியர்கள் பலரும் நினைத்து வருகிறார்கள்.  அதற்கு தகுந்தார்போல் ஏ. சி. சண்முகம் அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார் என்கிறார்கள் .

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ. சி. சண்முகம் ஆரணியில் வெங்கடாஜலபதி கோயில் கட்டியிருக்கிறார்.   இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று காலையில் நடந்தது. தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.   விழாவுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா,  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,   தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,  மணிப்பூர் மாநில ஆளுநர் இல. கணேசன்,  மத்திய அமைச்சர் முருகன்,  தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு ,  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

 எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து புறப்பட்டு விழாவிற்கு வந்து விட்டார் .  மதியத்திற்கு பிறகு பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து புறப்பட்டு விழாவிற்கு செல்ல இருக்கிறார் என்கிறார்கள்.   இந்த விழாவில் பன்னீர் செல்வமும் பழனிச்சாமியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் தற்போதைய சூழலில்  பரபரப்பாக இருக்கும். அதிமுகவை பொருத்தவரைக்கும் இது முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. 

  ஒருவேளை இருவரும் நேருக்கு நேர் சந்திக்காமல்,  எடப்பாடி பழனிச்சாமி விழாவில் பங்கேற்று விட்டு சென்ற பின்னர் பன்னீர்செல்வம் அங்கு சென்றால் இந்த நேருக்கு நேர் சந்திப்புக்கு வாய்ப்பாக அமையாமல் போவதோடு அல்லாமல் இருவருக்கும் இடைவெளி இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும் என்று கவலையுடன் சொல்கிறார்களாம் கட்சியின் சீனியர்கள்.