×

சசிகலாவை போல் ஓபிஎஸ்- ஐ அதிமுகவிலிருந்து ஓரம் கட்டவில்லை- ஜெயக்குமார்

 

ஒற்றை தலைமை விவகாரத்தை வெளியே சொன்னதற்கு எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை, கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் குறித்து மட்டும் தான் நான் தெரிவித்தேன் இவர் தான் அந்த ஒற்றை தலைமை என நான் கூறவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்ட  பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர், “ ஒற்றை தலைமை விவகாரத்தை பொறுத்தவரை கட்சியில் உள்ள தொண்டர்கள்,மாவட்ட செயலாளர்கள்,தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரின் மத்தியிலும் தற்போதைய சூழலில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது. அதுகுறித்து கூட்டத்தில் 
விவாதிக்கப்பட்டதின் காரணமாகவே அதனை வெளியே கூறினேன். கட்சியின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொண்டர்களுக்கு தெரிய வேண்டும் என மட்டுமே நான் அதனை வெளியே கூறினேன். மாறாக அதில் எந்த ஒரு உள் நோக்கமும் இல்லை,அதேபோல ஒற்றை தலைமை எனதான் நான் கூறி இருந்தேன். யார் அந்த ஒற்றை தலைமை என்றெல்லாம் நான் கூறவில்லை.

சசிகலாவை போல் ஓபிஎஸ் அவர்களை ஓரம் கட்டும் எண்ணம் எதுவும் இல்லை,சசிகலாவிற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. ஆனால் ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். தற்போதைய சூழலில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது, அதற்காக அவர் ஓரம் கட்டப்படவில்லை. நான் சிறையில் இருந்து வெளியே வந்த பின் இருவரும் என் வீட்டிற்கு வந்தனர், அதுபோல இன்று என் வீட்டிற்கு இருவரும் வந்தாலும் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.

மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்காத காரணத்தினால் நான் பேசுவதாக கூறும் கருத்துக்கள் பொய்யானது,எனக்கு அனைத்து பதவிகளும் வழங்கப்பட்டு உள்ளது ,சீட் வழங்குவதும் வழங்காததும் தலைமையின் முடிவு அதற்காக நான் வருத்தப்படவில்லை” எனக் கூறினார்.