×

அதிமுகவில் இருக்க தகுதியில்லை; ஈபிஎஸ் தனி கட்சி தொடங்கட்டும்- வைத்திலிங்கம்

 

2026 வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தான்,   இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் என தேர்தல் ஆணைய கடிதத்தை சட்ட விதிகளின்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில்  ஒ.பி.எஸ் ஆதரவு அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க வை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் துவக்கிய காலத்தில் அவர் கொண்டு வந்த சட்ட விதிப்படி, தொண்டர்களால் தான்  கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்தச் சட்டத்தை எக்காரணம் கொண்டும் மீற முடியாது. அதன் அடிப்படையில் 2021 டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதனுடைய பதவிக்காலம் 6 வருடங்கள், பொதுக்குழுவிற்கோ, செயற்குழுவிற்கோ அதை நீக்குவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. 

எடப்பாடி  பொதுக்குழுவைக் கூட்டி இடைக்கால பொதுச் செயலாளர் என்று அறிவித்துள்ளனர். அது நீதிமன்றத்தில் உள்ளது, இப்போது தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடிதம் முறையான சரியான 2026 வரை ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ் தான் இணை ஒருங்கிணைப்பாளர் என இந்திய தேர்தல் கமிஷன் ஆவணப்படி தமிழக தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது. அதை ஏற்றுக் கொள்ளக் கூடியது தான். சட்ட விதியின்படி சரியானது, அதை ஏற்காமல் இவர்கள் திருப்பி அனுப்பினால் அதிமுகவை விட்டு சென்று விட வேண்டும், தனிக்கட்சி தொடங்கிக் கொள்ளலாம், அதிமுகவில் இருப்பதற்கு எந்தத் தகுதியும் இவர்களுக்கு இல்லை” என சாடினார்.