×

”அண்ணாமலை ஒரு ஜோக்கர்; பாஜகவின் உத்தரவுப்படி தான் அதிமுகவின் பொதுக்குழு நடைபெறும்”

 

தமிழகத்தில் ஸ்டாலின் மட்டுமல்லாமல் அவரின் மகன் , மருமகன்  என நான்கு பேர்  முதல்வர்களாக  உள்ளனர் என  அரசியல் சட்டத்திற்கு எதிராக அவதூறாக பேசிவரும்  எடப்பாடி பழனிச்சாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக்கோரி முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  புகார் அளித்துள்ளார்.

சேலம் அருகே நிலவாரப்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு ஸ்டாலின் மட்டுமின்றி அவரது மகன் , மருமகன்,  மற்றும் அவர் மனைவி  என நான்கு பேர் முதலமைச்சராக செயல்படுகிறார்கள் என பேசினார். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.  

இந்நிலையில் தமிழக  முதலமைச்சர் பதவி  குறித்து அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக் கோரி அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி  இன்று   சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவிடம்   புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புகழேந்தி, “ நேற்று முன்தினம் சேலம் அருகே நிலவாரப்பட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, 
தமிழகத்தில்  நான்கு  முதல்வர்கள்  ஆட்சி செய்வதாக பேசி உள்ளார். அதாவது முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்லாமல் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் மருமகன் சபரீசன் மற்றும் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகிய 3 பேரும் தமிழக முதல்வராக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தை ஸ்டாலின் அவர்களோடு சேர்த்து அவர் குடும்பத்தினர் என நான்கு பேர் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்கள் என பேசியுள்ளார்.  இது ஜனநாயகத்திற்கு எதிரானது.  அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இப்படி பேசி வருவது சட்டப்படி குற்றமாகும். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆதாரத்துடன்  புகார் தெரிவித்துள்ளேன்.


மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, குடும்பமே ஆட்சி செய்வதால் தான் தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் வரவில்லை என எடப்பாடி பழனிச்சாமி,  முறையற்று பேசி வருவதை  ஏற்கமுடியாது.  இப்படிப்பட்ட பேச்சை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் புகார் அளித்துள்ளேன். தமிழகத்தை 4 முதல்வர்கள் ஆட்சி செய்கிறார் என கூறும் எடப்பாடி பழனிச்சாமி,  இந்திய நாட்டை நான்கு பிரதமர்கள் ஆள்வதாக சொல்வாரா? அதிமுகவின் தோளில் நின்று நான்கு  இடங்களை கைப்பற்றிய பாஜக,  தனியாக நின்று தமிழகத்தில் ஒரு தொகுதியையாவது கைப்பற்ற முடியுமா? மக்களால் எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவை புறந்தள்ளிவிட்டு,  பாஜக எதிர்க்கட்சி போல் செயல்பட நினைக்கிறது.  மேலும் பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் அனைத்தும்  ஜோக்கர் போல் உள்ளது.


பாஜகவின் உத்தரவுப்படி தான் அதிமுகவின் பொதுக்குழு நடைபெறும். ரவுடிகளை வைத்து தான்  இந்த பொதுக்குழு நடைபெறும். பிஜேபி-யின் அடிமை சாசனமாகத் தான் அதிமுக உள்ளது. மூத்த அதிமுக நிர்வாகி பொன்னையனைப் போல் பாஜகவை பற்றி விமர்சனம் செய்ய எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம்  உள்ளதா? இந்த ஓராண்டு ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக  உள்ளது. இது தமிழகத்தில் நிமிர்ந்து நிற்கிற ஆட்சியாக உள்ளது. மாநில சுயாட்சியை வலியுறுத்தும் ஆட்சியாக நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.