×

அதிமுக என்ற கட்சி இப்போது கம்பெனி ஆகிவிட்டது;  அவர்களுக்கு வக்காளத்து வாங்கியதற்கு  பாவ மன்னிப்பு கேட்கிறேன் - கோவை செல்வராஜ்

 

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்திருக்கும் கோவை செல்வராஜ்,  நான்கரை ஆண்டு காலமாக அவர்களுக்கு வக்காலத்து வாங்கியதற்காக மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். 

 ஒற்றை தலைமை விவாகரத்தால் அதிமுக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்று பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் திடீரென்று அந்த அணியில் ஏற்பட்ட அதிருப்தியினால் எடப்பாடி பழனிச்சாமி,  ஓ. பன்னீர்செல்வம் இருவருமே சுயநலமாக செயல்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

 சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.   விரைவில்  கோவை அதிமுக தொண்டர்கள் 5000 பேர் திமுகவில் இணைய உள்ளார்கள் என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார்.

 கோவை என்றால் திமுக கோட்டை என்பதை அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபித்துக் கொண்டிருக்கிறார்.   இனிமேல் அவருடன் சேர்ந்து நாங்களும் செயல்படுவோம் என்றும் கூறியிருக்கிறார். 

 திமுகவில் இணைந்த உடனே அதிமுக குறித்தும் அதிமுகவின் ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.   2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை சுமார் நான்கரை ஆண்டு காலமாக ஒரு சுனாமி வந்து நாட்டில் அழிவை ஏற்படுத்தியது போல எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழ்நாட்டில் சீரழிவு ஏற்பட்டுவிட்டது. 

 அந்த சீரழிவை ஒன்றரை ஆண்டு காலமாக சீரமைத்து மக்களாட்சி நடத்துகிறார் முதல்வர்.   நான்கரை ஆண்டு காலமாக நான் அவர்களுக்கு (இபிஎஸ் -ஓபிஎஸ் க்கு )வக்காலத்து வாங்கியதற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றவர்,   பாவமன்னிப்பு ஏன் கேட்கிறேன் என்றால் இன்றைய ஆட்சியில் இலவச பேருந்து வசதியால் தாய்மார்கள் பலனடைந்து இருக்கிறார்கள்.  எந்த அரசியல் தலையிடும் இல்லாமல் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடிகிறது.  மின் தட்டுப்பாடு சீராக இருக்கிறது. 

 தங்கமணி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது வெறும் பத்தாயிரம் விவசாயிகளுக்கு தான் இலவசம் மின்சாரம் கொடுக்கப்பட்டது.  ஆனால் இப்போது ஒன்றை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்திருக்கிறார்கள் . மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது என்றவர்,

 காலில் விழுந்து கொல்லைப் புறம் வழியாக வந்து ஆட்சியை நடத்திய எடப்பாடிக்கு,  முதல்வர் ஸ்டாலின் பற்றி பேச தகுதி கிடையாது . அதிமுக என்கிற கட்சி இப்போது கம்பெனி ஆகிவிட்டது .  உண்மையான அதிமுக தொண்டர்கள் ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் செயல்பட விரும்புகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.