×

தாக்கரே குடும்பத்தின் மீது மரியாதை இருப்பதாக கிளர்ச்சியாளர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்கள்.. ஆதித்யா தாக்கரே
 

 

தாக்கரே குடும்பத்தின் மீது மரியாதை உள்ளது கூறும்போது அவர்கள் அனைவரும் (கிளர்ச்சியாளர்கள்) பொய் சொல்கிறார்கள் என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.

சிவ சேனா தற்போது முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு பிரிவும், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு பிரிவும் என இரண்டாக பிரிந்து கிடக்கிறது. உத்தவ் தாக்கரே முகாமிலிருந்து பல  எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே  அணிக்கு தாவி விட்டனர். ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த 12 சிவ சேனா எம்.பி.க்கள்  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சந்தித்து, விநாயக் ரவுத்துக்கு பதிலாக ராகுல் ஷெவாலேவை கட்சியின் அவைத் தலைவராக நியமிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், மக்களவையின் சிவ சேனா தலைவராக ராகுல் ஷெவாலேவை சபாநாயகர் ஓம் பிர்லா அங்கீகரித்துள்ளார் என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே மகனும், மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான ஆதித்யா தாக்கரே கிளர்ச்சி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களை கடுமையாக விமர்சனம் செய்தார். இது தொடர்பாக ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: துரோகிகள் வெளியேறி விட்டனர், சிவ சேனா தலைவர்  உத்தவ் தாக்கரே ஒரு நல்ல மனிதர் என்று கருதுபவர்கள் இன்னுமு் கட்சியில் இருக்கின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் நம் மீதான வெறுப்பையும், கோபத்தையையும் அவிழ்த்து விட்டனர். இதனால் உண்மை வெளிவருகிறது. தாக்கரே குடும்பத்தின் மீது மரியாதை கூறும்போது அவர்கள் அனைவரும் பொய் சொல்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.