வெறிச்சோடி கிடக்கும் ஓபிஎஸ் வீடு! களைகட்டும் எடப்பாடி வீடு!
அதிமுகவில் இரட்டை தலைமை இருந்து வந்ததால் ஓ .பன்னீர்செல்வத்தின் வீட்டு வாசலிலும், எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டு வாசலிலும் ஆதரவாளர்களும் தொண்டர்களும் குவிந்திருந்து அந்தப் பகுதியை பரபரப்பாக்குவது வழக்கம் . தற்போது ஓபிஎஸ் -எடப்பாடி இருவருக்கு இடையே மோதல் உச்சத்திற்கு ஏற்பட்ட நிலையில் இருவரது வீடுகளிலும் ஆதரவாளர்கள் குவிந்து மேலும் பரபரப்பை அதிகமாக்கினர்.
ஆதரவாளர்களின் வருகையும் ஆலோசனையும் என்று இருவரது வீடும் பரபரப்பாகவே இருந்தது. எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் இன்னும் கூட்டம் வழக்கம்போல் கூடிக் கொண்டே இருக்கிறது . ஆனால், ஓபிஎஸ் வீட்டில் போக போக கூட்டம் குறைந்து கொண்டே வந்தது.
இன்றைக்கு ஒரு தொண்டர் கூட ஓபிஎஸ் வீட்டிற்கு வரவே இல்லையாம். இதனால் ஓபிஎஸ் வீடு வெறிச்சோடி கிடந்திருக்கிறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் பறக்கும் ரயில் நிலையத்தின் அருகே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் தான் ஓபிஎஸ் வீடு அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் ஓபிஎஸ் வீட்டின் வெளிப்புற கேட் திறந்தே இருந்திருக்கிறது. ஓபிஎஸ் வீட்டுக்குள் தனியாகத்தான் இருந்திருக்கிறார்.
வெளியே ஒரு சில பத்திரிகையாளர் மட்டுமின்றி இருந்திருக்கிறார்கள். காலை 11:00 மணிக்கு வரைக்கும் ஒரு தொண்டர் கூட அங்கே வரவில்லையாம். இதனால் ஏமாற்றத்துடன் இருந்திருக்கிறார் ஓபிஎஸ். 11 மணிக்கு பின்னர் தான் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், ரவீந்திரநாத் எம் பி வந்து இருக்கிறார்கள். அதன்பின்னரும் கூட தொண்டர்கள் ஒருவர் கூட வரவில்லையாம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் அதிகாலையிலேயே கூட்டம் திரள ஆரம்பித்து விடுகிறது என்கிறார்கள்.