பதவியேற்ற கவுன்சிலர்கள் கடத்தல்- மயிலாடுதுறை பரபரப்பு
பதவி ஏற்றுக்கொண்டு கவுன்சிலர்கள் டெம்போ வேன் மற்றும் சொகுசு வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்டதால் மயிலாடுதுறை நகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 19வது வார்டு நகரசபை உறுப்பினர் பதவிக்காக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் இறந்து போனார். இதனால் 19வது வார்டு காண தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள 25 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட இடங்களில் திமுக சார்பில் 24 பேரும், அதிமுக சார்பில் 7 பேரும், பாமக சார்பில் 2 பேரும் , மதிமுக -காங்கிரஸ் சார்பில் தலா ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றனர். நாளை மறுநாள் நகரசபைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது . இந்த பதவிகளைக் கைப்பற்ற திமுக இரண்டு அணிகளாகப் பிரிந்து தங்கள் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
இன்று பதவி ஏற்று வெளியே வந்த பெரும்பாலான திமுக நகர சபை உறுப்பினர்களையும் ஒருசில அதிமுக நகர சபை உறுப்பினர்களையும் ஒரு பிரிவைச் சேர்ந்த திமுகவினர் தாங்கள் கொண்டுவந்த டெம்போவில் அவசரஅவசரமாக ஏற்றினர். அப்போது மற்றொரு பிரிவினர் தங்களுக்கு ஆதரவு திரட்ட முயற்சித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் தள்ளுமுள்ளு பரபரப்பு ஏற்பட்டது.
சில கவுன்சிலர்களை என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக திமுகவினர் வேனில் ஏற்ற முயன்றனர் . ஆனாலும் அவர்கள் மறுத்து வெளியேறிச் சென்றார்கள். ஒரு சிலர் சொகுசு வாகனத்தில் ஏறி சுற்றுலா செல்வது போல் டாடா காட்டிக்கொண்டு கையசைத்து மகிழ்ச்சியாக சென்றார்கள்.
கவுன்சிலர் கடத்தப்பட்டதால் மயிலாடுதுறை நகராட்சி பரபரப்பு நிலவுகிறது.