×

காங்கிரஸை தவிர வேறு எந்த கட்சியும் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதில்லை... அஜய் மாக்கன்
 

 

காங்கிரஸை தவிர வேறு எந்த கட்சியிலும் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதில்லை, ஆகையால் நம்ம கட்சியிலாவது தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது என்று திருப்தி பட்டுக்கொள்ளுங்கள் என்று அஜய் மாக்கன் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வெளிப்படையாக மற்றும நேர்மையாக நடைபெற வேண்டும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்களான மணிஷ் திவாரி, சசி தரூர் போன்றோர் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய கட்சி தலைவர் தேர்தலுக்கான வாக்காளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என மணிஷ் திவாரி வலியுறுத்தினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை தவிர வேறு எந்த கட்சியிலும் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதில்லை, ஆகையால் நம்ம கட்சியிலாவது தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது என்று திருப்தி பட்டுக்கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மாக்கன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அஜய் மாக்கன் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவதில்லை. காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கட்சியின் விதிகளின்படி நடைபெறும். 

எந்த அரசியல் கட்சியிலும் தேர்தல் இல்லாததால் அனைவரும் திருப்தி அடைய வேண்டும். பா.ஜ.க.வில் ஜே.பி. நட்டா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா, அமித் ஷாவை தேர்வு செய்தது பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் தீவிரமாக உள்ளனர். அதேசமயம், காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று ஒரு தரப்பினர் விரும்புகின்றனர்.