×

பா.ஜ.க.வின் ஆட்சியில் குற்றவாளிகள் முன்பை விட அச்சமின்றி உள்ளனர். சட்டம் ஒழுங்கு மோசம்.. அகிலேஷ் யாதவ்
 

 

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் 2வது ஆட்சியில் குற்றவாளிகள் முன்பை விட அச்சமின்றி உள்ளனர் என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து 2வது முறையாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அண்மையில் அந்த மாநிலத்தில் நடந்த சில குற்ற சம்பவங்களை குறிப்பிட்டு பா.ஜ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் இரண்டாவது ஆட்சியில், குற்றவாளிகள் முன்பை விட அச்சமின்றி உள்ளனர். காவல்துறையை கண்டு அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. 

வங்கி கொள்ளை, லாக்கர் திருட்டு, பலாத்காரம், துப்பாக்கிச் சூடு, கொலை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாநில மக்கள் பீதியடைந்து, சுற்றிலும் அச்சமான சூழல் நிலவுகிறது. உத்தர பிரதேசத்தில் குற்றத்தின் புல்லட் ரயில் ஓடுகிறது. பா.ஜ.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. முதல்வர் (யோகி ஆதித்யநாத்) பெரிய கூற்றுக்களை கூறுகிறார். ஆனால் உண்மை என்னவென்றால், நிர்வாக இயந்திரத்தின் மீது அவருக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஒரு வழியில், உத்தர பிரதேசத்தில் ஜீரோ ஹவர் சட்டம் ஒழுங்கு நடந்து வருகிறது. 


ரேபரேலியில் ஒரு கிராம தலைவரின் சகோதரர் கொலை செய்யப்பட்டார். புடானில் உள்ள காவல் நிலையத்தின் முன் தொழிலதிபர் படுகொலை செய்யப்பட்டார். மிஷன் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் ரோமியோ எதிர்ப்பு படைகள் காகிதத்தில் உள்ளன. மீரட்டில் பல மாணவிகள் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். நொய்டாவில் பாலியல் வன்கொடுமை புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஒரு சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.