×

ஏன் ரகளை உருவாக்குகிறீர்கள்.. பா.ஜ.க.வின் தூண்டுதலில் இதை செய்கிறீர்கள்.. போலீஸ்காரர்களை சத்தம் போட்ட அகிலேஷ் 

 

உத்தர பிரதேசத்தில் தேர்தல் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் காவல்துறையினரை பார்த்து, போலீஸ்காரர்களே நீங்கள் ஏன் ரகளை உருவாக்குகிறீர்கள், நீங்கள் பா.ஜ.க.வின் தூண்டுதலில் இதை செய்கிறீர்கள் என கத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தர பிரதேசம் கன்னௌஜில் சமாஜ்வாடி கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு இருந்தனர். இதை பார்த்த அகிலேஷ் யாதவ் போலீசாரை பார்த்து சத்தமாக பேசினார்.

அகிலேஷ் யாதவ் போலீஸ்காரர்களை பார்த்து, ஏய் போலீஸ்காரர்களே நீங்கள் ஏன் ரகளை உருவாக்குகிறீர்கள். உங்களை விட முரட்டுத்தனமாக யாரும் இருக்க முடியாது. தோழர்களே, நீங்கள் பா.ஜ.க.வின் தூண்டுதலின் பேரில் இதை செய்கிறீர்கள் என்று தெரிகிறது என்று சத்தமாக கூறினார். இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது என்று பா.ஜ.க. கூறிவருவதால், அகிலேஷ் யாதவ் கருத்துக்கு பா.ஜக. தரப்பிலிருந்து சரியான எதிர்வினை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் கடந்த 10ம் தேதி மொத்தம் 7 கட்டங்களா நடைபெற்று  வருகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது. 3ம் கட்ட தேர்தல் வரும் 20ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 10ம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.