×

ஒரே நாடு ஒரே ரேஷன் என்றார்கள் ஆனால் ஒரே நாடு ஒரே தொழிலதிபருக்காக வேலை செய்கிறார்கள்.. பா.ஜ.க.வை சாடிய அகிலேஷ் 

 

பா.ஜ.க. ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற முழகத்தை கொடுத்தது. ஆனால் அவர்கள் ஒரே நாடு ஒரே தொழிலதிபருக்காக வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஞானவாபி போன்ற சம்பவங்கள் வேண்டுமென்றே பா.ஜ.க.வால் அல்லது அவர்களின் உதவியாளர்களால் திரைக்கு பின்னால் தூண்டப்படுகின்றன. எரிபொருள் மற்றும் உணவு பொருட்கள் விலை உயர்ந்து வருகின்றன. 


பணவீக்கம் மற்றும் வேலையின்மை குறித்து அவர்களிடம் பதில் இல்லை. இது போன்ற பிரச்சினைகளை கொண்டு வர பா.ஜ.க. வெறுப்பு நாட்காட்டி வைத்துள்ளது. இத்தகையை மோதல்களை கொண்டு வருவதன் மூலம் உண்மையான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தவறுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப ஆளும் கட்சி முயற்சி செய்கிறது. 

இது போன்ற விவாதங்களை நாம் காணும்போது, நாட்டின் சொத்து என்ன விற்கப்பட்டது என்று நமக்கு தெரியாது. பா.ஜ.க. ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற முழகத்தை கொடுத்தது. ஆனால் அவர்கள் ஒரே நாடு ஒரே தொழிலதிபருக்காக வேலை செய்கிறார்கள் என்று தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.