×

பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் வறுமை, ஊழல், மோசடி, கலப்படம், நெறிமுறையற்ற நடைமுறைகள் ஆகிய 5ஜியை பெறுகிறார்கள்.. அகிலேஷ்

 

பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் ஏற்கனவே வறுமை, ஊழல், மோசடி, கலப்படம், நெறிமுறையற்ற நடைமுறைகள் ஆகிய 5ஜியை பெறுகிறார்கள் என்று பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்ததை அகிலேஷ் யாதவ் கிண்டல் செய்துள்ளார்

டெல்லி பிரகதி மைதானத்தில் நேற்று நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5ஜி சேவையை  பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.  முதல் கட்டமாக மும்பை,  டெல்லி,  சென்னை,  கொல்கத்தா,  அகமதாபாத் உள்ளிட்ட 13 நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் படிப்படியாக இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: டிஜிட்டல் இந்தியா என்பது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டம். 

இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல 5ஜி வழிவகுக்கும். 5ஜி சேவை மூலம் உலக அளவில் இந்தியா சிறப்பான முன்னேற்றத்தை அடையும்.  இந்த 5ஜி சேவையானது கிராம மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும். ஏழை எளிய மக்களுக்கு இந்த 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டுசெல்லவேண்டியது நமது பொறுப்பு ஆகும். 5ஜி மூலம் பல புதிய வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்ததை  அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் கணக்கில், பா.ஜ.க.  ஆட்சியின் கீழ் மக்கள் ஏற்கனவே 5ஜியை பெறுகிறார்கள். ஜி- garibi (வறுமை), ஜி-ghotala (ஊழல்), ஜி-ghapla (மோசடி), ஜி-ghalmel (கலப்படம்) மற்றும் ஜி-gorakhdhanda(நெறிமுறையற்ற நடைமுறைகள்) என்று பதிவு செய்துள்ளார்.