×

அயோத்தி நில முறைகேடு.. பா.ஜ.க.வின் ஊழல்வாதிகள் குறைந்தபட்சம் அயோத்தியையாவது விட்டுவிடுங்கள்- அகிலேஷ் யாதவ்
 

 

அயோத்தி நில முறைகேட்டை குறிப்பிட்டு, பா.ஜ.க.வின் ஊழல்வாதிகள் குறைந்தபட்சம் அயோத்தியையாவது விட்டுவிடுங்கள் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் அயோத்தியில் மாபியாக்களுடன் இணைந்து அயோத்தி மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்புகளை கட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக அந்நகர மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய, பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேத பிரகாஷ் குப்தா உள்பட 40 பேர் மீது அந்த ஆணையம் புகார் தெரிவித்தது. மேலும், 40 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயோத்தி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.

இதனையடுத்து அயோத்தி நில முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சமாஜ்வாடி கட்சி உத்தர பிரதேச அரசை வலியுறுத்தியது. இந்நிலையில், அயோத்தி நில முறைகேட்டில் பா.ஜ.க.வை அகிலேஷ் யாதவ் கிண்டலாக தாக்கியுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான  அகிலேஷ் யாதவ் டிவிட்டரில், நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம், மீண்டும் மீண்டும் சொல்கிறோம். பா.ஜ.க.வின் ஊழல்வாதிகள் குறைந்தபட்சம் அயோத்தியையாவது விட்டுவிடுங்கள் என பதிவு செய்துள்ளார்.

சமாஜ்வாடி கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், அயோத்தியில் பா.ஜ.க.வினர் செய்த பாவம். பா.ஜ.க.வின் மேயர், உள்ளூர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ஆகியோர் நில மாபியாக்களுடன் இணைந்து சட்டவிரோத காலனிகளை நிறுவி  வருகின்றனர். பொறுப்பு வாய்ந்த துறைகளுடன் இணைந்து 30 சட்ட விரோத காலனிகள் அமைக்கப்பட்டு, பல நூறு கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவு செய்துள்ளது.