×

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா! அண்ணாமலைக்கு சொல்லும் ஜெ., உதவியாளர்
 

 

அண்ணாமலை அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார் என்பது, அவரை பலரும் சேர்ந்து வீழ்த்த நினைப்பதில் இருந்தே வெளிப்படையாகத் தெரிகிறது என்கிறார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம்.

அவர் மேலும்,   எதிர்க்கட்சியினரை திணறடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு உட்கட்சியிலேயே பிரச்சனை வருகிறது. அதுவாக வருகிறதா இல்லை எதிரிகளால் புகுத்தப்படுகிறதா? புரியவில்லை. நாம் வளர்கிறோம் என்றால் நமக்கு எதிரிகளும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

தொடர்ந்து அதுகுறித்து தனது வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் பூங்குன்றன்,   ஒரு கட்சியில் ஏற்கனவே பயணித்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில் புதிதாக ஒருவர் தலைவராகும் போது எதிர்ப்புக்கள் எழத்தான் செய்யும். அதிலும் இவர் இளைஞராக வேறு இருக்கிறார். சொந்தக் கட்சியில் சிலர் எதிர்க்கத்தானே செய்வார்கள். ஒரு தலைவர் புதிதாக வளர்கிறார் என்பதை சொந்தக் கட்சியிலும், எதிர்க்கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தடை போட முயற்சிக்கிறார்கள். திட்டம் போட்டு போராடுகிறார்கள்.

இன்றைக்கு திமுகவிற்கு எதிரி அதிமுக என்ற நிலையை மாற்றிக் கொண்டு இருக்கிறாரே..! அண்ணாமலை என்று மக்களே வியந்து பேசுகிறார்கள். சிலர் பாஜக தான் தமிழகத்தில் எதிர்கட்சியாக செயல்படுகிறது என்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள். அண்ணாமலை அவர்கள் பேசினால் காரியம்  நடக்கிறது என்று பலரும் நம்புகிறார்கள். அப்படி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்களை எதிரிகளும், நண்பர்களும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா..! என்கிறார்.

"அரசியல்வாதியின் மூளை வித்தியாசமாக வேலை செய்யும்" அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால் அண்ணாமலை அவர்கள் காவல்துறை அதிகாரி என்பதை மறந்துவிட்டு முழு அரசியல்வாதியாக மாறி இந்தப் பிரச்சனைகளை கையாண்டால் அதற்கு எளிதாக தீர்வு கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. இனி அண்ணாமலை அவர்கள் தன்னுடன் நெருக்கமாக வைத்துக் கொள்பவர்களை கூட பலமுறை யோசித்து விட்டே வைத்துக் கொள்ள வேண்டும். "அரசியலில் இனி யாரையும் நம்புவதற்கு இல்லை' என்பதே பல தலைவர்கள் கற்றுக்கொண்ட பாடம். 

வளர்ந்து கொண்டிருப்பவரை எல்லோரும் சேர்ந்து வீழ்த்த நினைக்கிறார்கள் என்றால் நாம் அடுத்த அடியைப் பார்த்து பார்த்து எடுத்து வைக்க வேண்டும். ஒரு முறைக்கு பலமுறை யோசித்து அண்ணாமலை அவர்கள் இனி அடுத்த அடிகளை எடுத்து வைக்க வேண்டும் என்பதை காலம் அவருக்கு போதிக்கிறது. அடுத்த அடி எது என்பது தன்னை தவிர யாருக்கும் புரியக்கூடாது என்பதே இன்றைய தேவை. பேச்சைக் குறைத்து செயலில் வேகத்தை கூட்ட வேண்டும் என்பது அண்ணாமலை அவர்களுக்கு நான் தரும் ஆலோசனை..! எது எப்படியோ..! "நான் வளர்கிறேனே மம்மி" என்று அண்ணாமலை சொல்வது காதில் விழாமலில்லை..! என்கிறார்.