×

ஆம்பளையா இருந்தா... செந்தில்பாலாஜி ஆவேசம்

 

 மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவும் அதிமுகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றன.   கரூர் மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில்  பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியபோது,  கரூரைச் சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்து மக்களின் மடியில் கை வைப்பதற்காகவே மின் கட்டண உயர்வினை ஏற்படுத்தியிருக்கிறார்.  எதற்காக மின் கட்டணத்தை  உயர்த்துகிறீர்கள் என்று கேட்டால் மோடி சொன்னார் நாங்கள் செய்தோம் என்று சொல்கிறார்.   மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய அரசு எழுதிய கடிதத்தை செந்தில் பாலாஜி வெளியிட வேண்டும்.   தமிழக மின்சார வாரியத்தின் கடனை குறைக்கவே மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும் .  மற்றபடி மின்கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை என்று சொன்னார்.

இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,   ‘’தைரியமான ஆண் மகனாக இருந்தால் மின்துறை பற்றிய முறைகேடுகள் குறித்த ஆவணங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் என் மீது வழக்கு தொடரலாம்.   ஆனால் பாஜக அதைச் செய்யவில்லை .  அந்த தைரியத்தை விட்டுவிட்டு பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு அரைவேக்காட்டுத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் அல்ல இது.  அதற்காக என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

 உண்மையிலேயே தைரியம் இருந்தால் ஒரு ஆம்பளையா இருந்தால் அண்ணாமலை என் மீது கேஸ் போடட்டும்.  கேஸ் போட வேண்டியதுதானே? எல்லா அதிகாரமும் கையில் இருக்கே.  தமிழ்நாடு செய்யக்கூடிய தவறுகளை குறிப்பாக மின்சாரத்  துறை செய்யக்கூடிய தவறுகளை நீதிமன்றத்திற்கு சென்று தமிழ்நாடு பாஜக தங்களிடம் இருக்கும் விவரங்களை நீதித்துறையிடம் தாக்கல் செய்து வழக்குகளை என் மீது தொடரட்டும்.

 ஆவணங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும்.  நாங்களும் நீதிமன்றத்தில் சந்திக்கிறோம்.  சரியா தவறா நீதிமன்றத்தில் தெரிந்துவிடும்.’’என்றார்.

அவர் மேலும்,   ‘’பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் மின்கட்டண உயர்வு  அதிகம் இருக்கிறது.   இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவாக வசூலிக்கப்படுகிறது.  மின் கட்டண உயர்வுகுறித்து பாஜக, ஏன் 410 ரூபாய்க்கு விற்ற சிலிண்டர் இன்றைக்கு 1100க்கு விற்கப்படுகிறது என்பதை சொல்லவில்லை.  வெறுமனே முன்பக்க பத்திரிக்கையில் செய்தி வரவேண்டும் என்பதற்காகவும் தொலைக்காட்சிகளில் லைவ்களில் இடம் பெற வேண்டும் என்பதற்காகவும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

’’ திரும்பவும் சொல்கிறேன் தைரியமும் நேர்மையும் இருந்தால் நீதிமன்றத்திற்கு செல்லட்டும்.  தமிழக பாஜக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதற்கு நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்.   ஒரு கட்சிக்கு பொறுப்புக்கு வந்து விட்டோம் என்பதற்காக நானும் இருக்கிறேன்  என்று காட்டிக் கொள்வதற்காக எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்’’என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார்.