பா.ஜ.க.வில் உள்ள யாருக்கும், நிச்சயமாக பிரதமருக்கு மம்தா பானர்ஜியிடம் இருந்து எந்த அங்கீகாரமும் தேவையில்லை... அமித் மால்வியா
பா.ஜ.க.வில் உள்ள யாருக்கும், நிச்சயமாக பிரதமருக்கு மம்தா பானர்ஜியிடம் இருந்து எந்த அங்கீகாரமும் தேவையில்லை என்று அமித் மால்வியா பதிலடி கொடுத்தார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய புலனாய்வு அமைப்புகளின் அதிகப்படியான செயல்களுக்கு எதிரான தீர்மானத்தை முன்வைத்தார். அதன் பிறகு மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: தொழிலதிபர்கள் நாட்டை விட்டு ஓடுகிறார்கள். அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.க்கு பயந்தும், தவறாக பயன்படுத்தப்படுவதாலும் அவர்கள் ஓடுகிறார்கள். மோடி இதை செய்யவில்லை என்று நான் நம்புகிறேன். சி.பி.ஐ. எப்போதும் பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அளிக்காது என்பது உங்களில் பலருக்கு தெரியாது.
இது (சி.பி.ஐ.) உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கிறது. சில பா.ஜ.க. தலைவர்கள் சதி செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி நிஜாம் அரண்மனைக்கு செல்கிறார்கள். தற்போதைய மத்திய அரசு சர்வாதிகார போக்கில் நடந்து கொள்கிறது. இந்த தீர்மானம் குறிப்பாக யாருக்கும் எதிரானது அல்ல. மாறாக மத்திய அமைப்புகளின் பாரபட்சமான செயல்பாட்டிற்கு எதிரானது. இவ்வாறு அவர் தெரிவித்தார். எப்போதும் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி வரும் மம்தா, நேற்று முன்தினம் மோடி மீது குற்றம் சுமத்தாமல் பேசியது பலரது புருவத்தையும் உயர்த்தியது. இந்நிலையில், மம்தாவிடம் இருந்து பா.ஜ.க.வில் உள்ள யாருக்கும் எந்த அங்கீகாரமும் தேவையில்லை என்று பா.ஜ.க. பதிலடி கொடுத்துள்ளது.
பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், பா.ஜ.க.வில் உள்ள யாருக்கும், நிச்சயமாக பிரதமருக்கு மம்தா பானர்ஜியிடம் இருந்து எந்த அங்கீகாரமும் தேவையில்லை. நீதிமன்றங்கள் விசாரணைக்கு உத்தரவிட்டதால், அவரது (மம்தா பானர்ஜி) அரசும், உயர் மட்ட தலைவர்கள், கட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் நெருங்கிய குடும்பத்தினர் (அபிஷேக் பானர்ஜி) மத்திய ஏஜென்சிகிளின் ரேடாரின் கீழ் உள்ளனர். அடித்த கொள்ளைக்கு அவர் (மம்தா பானர்ஜி) பொறுப்பேற்க வேண்டும் என பதிவு செய்து இருந்தார்.