ராகுலுடன் நடைப்பயணம், ரகுராம் ராஜன் தன்னை அடுத்த மன்மோகன் சிங் என்று கற்பனை செய்கிறார்.. அமித் மால்வியா கிண்டல்
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ரகுராம் ராஜன் பங்கேற்றதை குறிப்பிட்டு, ரகுராம் ராஜன் தன்னை அடுத்த மன்மோகன் சிங் என்று கற்பனை செய்கிறார் என்று பா.ஜ.க.வின் அமித் மால்வியா விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் சாவாய் மாதோபூரில் நேற்று காலை ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தை தொடங்கினார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்றார். நடைப்பயணத்தின்போது, ராகுல் காந்தியுடன் ரகுராம் ராஜன் ஆலோசனை செய்தவாறு வந்தார்.
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ரகுராம் ராஜன் பங்கேற்றதையடுத்து அவரை பா.ஜ.க. விமர்சனம் செய்துள்ளது. பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் காங்கிரஸால் நியமனம் செய்யப்பட்டவர். அவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் இணைவது ஆச்சரியமல்ல. ரகுராம் ராஜன் தன்னை அடுத்த மன்மோகன் சிங் என்று கற்பனை செய்கிறார். இந்தியாவின் பொருளாதாரம் குறித்த அவரது வா்ணனை வெறுப்புடன் நிராகரிக்கப்பட வேண்டும். இது வண்ணம் மற்றும் சந்தர்ப்பவாதமானது என பதிவு செய்துள்ளார்.
இந்திய ஒற்றுமை நடைப்பயண திட்டத்தின்படி, ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ. தொலைவை 5 மாதங்களில் நிறைவு செய்கிறார். இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா,மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது.