×

திராவிடம் ஒரு வெங்காயம் - தமிழக அரசியலில் மீண்டும் புயலைக் கிளம்பும் புத்தகம்

 

திமுகவும் திராவிடமும் பிரிக்க முடியாதது.  திமுகவினரின் தொடர் முழக்கமாக இருப்பது திராவிடம் .  ஆனால்,   திராவிடம் என்ற வார்த்தையை முதன் முதலில் அரசியலில் பயன்படுத்தியது பெரியார்.  அவரே பிற்காலத்தில் திராவிடம் ஒரு வெங்காயம் என்று குறிப்பிட்டுள்ளார்.   திராவிடத்தை கொண்டாடும் திமுகவை அவரே கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 இந்த பின்னணியில் தான்,  திராவிடம் பற்றி திமுகவுக்கு நிறைய கேள்விகளை எழுப்பி திராவிட கருத்திலிருந்து பெரியார் பின் வாங்கியது எதனால்? என்பதை ஆராய்ந்து,   1961 ஆம் ஆண்டு ரா. சண்முகம் என்பவர்  ‘திராவிட நாடு ஒரு வெங்காயம்’ என்கிற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.  சென்னையில் மதுர நிலையம் என்கிற பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.   அந்த காலத்தில் இந்த நூல் புயலை கிளப்பி உள்ளது.

 ராஜராஜ சோழன் இந்துவா? என்ற சர்ச்சை பூதாகரமாக வெடித்து இருக்கும் நிலையில்,  இந்த புத்தகத்தின் பக்கங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி,  தமிழக அரசியலில் மீண்டும் புயலைக் கிளம்பி இருக்கிறது.

 ’’எந்த ஒரு இலட்சியத்தை முன்னிறுத்தி ஒரு இயக்கம் போராடுகிறதோ அந்த லட்சியத்தை பற்றி ஒரு திட்டமான தெளிவான முடிவான கருத்து இருந்தாக வேண்டியது அவசியம்.  கொள்ளை அடிப்பவனுக்கு கூட ஒரு கொள்கை உண்டு.  கொள்ளைக்காரன் அந்த கொள்கையின் வழிமுறைகளை தெளிவாக உணர்ந்து இருப்பான் . ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் என்று கூறப்படும் வினோத இயக்கத்தின் லட்சியமும் நமக்கு புரியவில்லை.  நமக்கு புரியாதது கூட வியப்பான விஷயம் இல்லை.  அந்த இயக்கத்தின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் கூட அது புரிந்ததாக தெரியவில்லை .

ஒரு இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் கொள்கையில் இலட்சியத்தில் லேசான குழப்பங்கள் தலை காட்டுவது கூட இயல்பு என்று ஒதுக்கி விடலாம்.  ஆனால் 15 ஆண்டு காலமாக வளர்ச்சி பெற்று வெற்றி பாதையில் வீறு நடை போடுவதாக கூறிக் கொள்ளப்படும் ஒரு இயக்கம் இன்னும் கூட குழப்பத்திற்கு இருந்து கொண்டிருக்கிறது என்றால் அது விந்தையிலும் விந்தை என்பதல்லவா?

 அடைவோம் திராவிட நாடு என்று தொண்டை வறள கத்துகிறார்கள்.  திராவிட நாடு கிடைக்காவிட்டால் அடைவோம் சுடுகாடு என்றும் ஆர்ப்பரிக்கிறார்கள் . ஆண்டுகள் 15 ஆகியும் திராவிட நாடு அடைவதற்கான ஆரம்ப முயற்சியைக் கூட செய்யவில்லை .  திராவிட நாடு என்பதற்கான விளக்கத்தைக் கூட தெளிவாக தரவில்லை.  அடுத்து அவர்கள் சொன்னது போல் சுடுகாட்டையும் நாடவில்லை’’ என்று அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.  

’கொள்கையற்ற குழப்பவாதிகள் என்கிற தலைப்பில் மேற்கண்டவை இடம்பெற்றுள்ளன.    ’தமிழினத்தின் துரோகிகள்’ என்கிற தலைப்பில்,   ’’தமிழினத்தின் தேசிய உணர்ச்சியை மங்க வைத்து கலாச்சார மனநிலையை மாய்த்து பண்பை படுகுழியில் தள்ளி நாகரிகமற்ற முறைகளை பரப்புவதையே பெரும் பணியாக கொண்டு வாழ்கிறது வளர்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். 

 தமிழினத்தின் ஒற்றுமையை சிதைப்பதிலும் தமிழ் மொழியின் வளர்ச்சியை தடுப்பதிலும் தமிழகத்தின் வழி வரும் பண்பை கெடுப்பதிலும் திமுகவுக்கு நிகர் திமுக தான்.  தமிழக நலனில் இவர்களுக்கு ஆர்வம் இருந்தால் ‘தமிழர் முன்னேற்ற கழகம்’ என்பதாக தங்கள் இயக்கத்திற்கு பெயர் சூட்டியிருப்பார்கள்.  தமிழர்கள் என்று தங்களைப் பற்றி பெருமையோடு கூறிக் கொள்வதை விடுத்து ‘திராவிடர் என்று வெட்கமின்றி தங்களை தாங்களே அழைத்துக் கொள்ளும் கெடுமதியே அவர்களது வழி தவறிய மனநிலையை காட்டுகிறது அல்லவா?

 கேரளம், கன்னடம், ஆந்திர நாடுகளுடன் கூடி வாழும் விருப்பத்தை யாரும் குறை கூறவில்லை .  உலகம் முழுவதுமே நட்புறவோடு வாழ வேண்டும் என்ற தத்துவம் பேசப்படும் காலம் இது.   அதற்காக பெற்ற தாயை மறக்கும் பேதை மதியீனரைப் போல் பிறந்த  பொன்னாாட்டை, பேசும் மொழியை மறந்துவிட்டு மாற்றிவிட்டு வழக்கில் இல்லாத திராவிடர் என்ற வெற்றுச் சொல்லை வைத்து சிலம்பாட்டம் ஆட வேண்டுமா?’’ என்ற கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

 சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் இந்த நூல்,  தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றன.