×

நான் பாமக தலைவரா? அன்புமணி ராமதாஸ் விளக்கம் 

 

பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு திம்மாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன் மற்றும் கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதில் மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி,  மாநில வன்னியர் சங்க தலைவர் திருக்கச்சூர் ஆறுமுகம்,  உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

 இதனைத்தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்குகள் பெண்களுடையது. ஆனால் அது ஓட்டுகளாக மாறவில்லை அதனை ஓட்டுக்களாக மாற்ற வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியில் யாரும் பொறுப்புக்காக வரவில்லை, தமிழகத்தில் நாம் கட்சியை தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை,  நம்முடைய கட்சி வித்தியாசமானது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக நிறைய சாதனைகளை செய்துள்ளனர்.

எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது.‌ ஆனால் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும். இந்த பொதுக்குழு கூட்டம் கூட்டியது நான் முதலமைச்சராக வரவேண்டும் என்று இல்லை. பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதால் தான், நம்மால் மட்டுமே தமிழகத்தை உயர்த்த முடியும். 55 ஆண்டு காலம் தமிழகத்தை இரு கட்சிகளும் ஆட்சி செய்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் எந்த முன்னேற்றம் ஏற்படல்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும், அதனால் இந்த பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது. புதியதாக பாமக 2.0 திட்டம் செயல்படுத்தி உள்ளது. அடுத்த வரக்கூடிய தேர்தல்களில் புதிய யூகங்களை பயன்படுத்த உள்ளோம். இப்போதே அதனை நடைமுறை படுத்தி உள்ளோம். அனைத்து கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும், வார்டுகளிலும் நம்முடைய கட்சி கொடி பறக்க வேண்டும். நம்முடைய அகராதியில் முடியாதது என்று ஏதும் இல்லை. வரும் 2026 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்கும் அதனை மக்கள் முடிவு செய்து விட்டார்கள். 

 2026-ல் திமுக, அதிமுக எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அதனால் நாம் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றினால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். திமுக அடுத்த தேர்தலில் வெற்றி பெறாது  அதிமுகவின் காலம் போய் விட்டது. அடுத்ததாக மக்கள் நம்மீது தான் நம்பிக்கை வைத்துள்ளார்கள் அதனால் எங்கும் அடிதடி கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது” என பேசினார்.