×

"வலை விரிக்கிறார்கள்.. சிக்கிராதீங்க ஸ்டாலின்" - எச்சரிக்கும் அன்புமணி!

 

கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 2 அணு அலகுகள் இயங்கி வருகின்றன. இச்சூழலில் 3 மற்றும் 4 அணு அலகுகள் அமைக்கவும் இந்திய அணுசக்திக் கழகம் அனுமதி அளித்துள்ளது. அணு உலைகளில் இருந்து உற்பத்தியாகும் கழிவுகளை உலைக்கு வெளியே சேமித்து வைப்பதற்கான `Away From Reactor' மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இச்சூழலில் Reactor மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் இணையதளம் வழியாக இந்திய அணுசக்திக் கழகம் வெளியிட்டுள்ளது. 

இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தனது ட்விட்டரில், "கூடங்குளம் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைப்பதற்கான பாதாள கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அது குறித்து தமிழக அரசுடன் பேச தேசிய அணுமின் கழகத் தலைவர் புவன் சந்திரபதக் அடுத்த வாரம் சென்னை வருவதாக தெரிகிறது. கூடங்குளம் அணுக்கழிவு பாதாள கட்டமைப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டும்; 


பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவது தான் அவரது பயணத்தின் நோக்கமாகும். அந்த அழுத்தங்களுக்கு பணியக் கூடாது. அணுக்கழிவு பாதாளக் கட்டமைப்பை ஏற்படுத்தினால், அது தென் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது பாமக தான். கூடங்குளம் அணு உலையை விட தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தான் அரசுக்கு முக்கியம். அதில் எந்த சமரசத்தையும் அரசு செய்து கொள்ளக்கூடாது. தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது" என குறிப்பிடப்பட்டுள்ளது.