×

உண்மையைச் சொன்ன காயத்ரி ரகுராம் - கடுப்பான அண்ணாமலை  

 

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டது முதல் காயத்திரி ரகுராமுக்கும் அவருக்குமான மோதல் தொடர்ந்து வருகிறது . காயத்ரி முன்னர் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளராக இருந்தார்.   அந்த பிரிவில் தனக்கு கீழ் இருந்த நிர்வாகிகளை தலைமையின் அனுமதி இன்றி தன்னிச்சையாக செயல்பட்டு நீக்கம் செய்தார் காயத்ரி ரகுராம்.  

 இதனால் அந்த பொறுப்பில் இருந்து காயத்ரி ரகுராமை நீக்கி உத்தரவிட்டிருந்தார் அண்ணாமலை.   இதன் பின்னர் தான் காயத்ரி ரகுராமுக்கு வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.  அதன் பின்னரும் அண்ணாமலைக்கும் அவருக்குமான மோதல் தொடர்ந்து வந்திருக்கிறது. 

 கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தவர் காயத்ரி ரகுராம்.  அவ்வப்போது அவர் தனது கருத்துகளால் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.  இது பாஜகவுக்குள் அடிக்கடி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.  குறிப்பாக அண்ணாமலையை எரிச்சல் படுத்தும் விதமாக பல கருத்துக்களை சொல்லி வந்திருக்கிறார். அண்ணாமலையை காயத்ரி ரகுராம் மறைமுகமாக விமர்சிப்பதாக கட்சிக்குள் ஒரு சலசலப்பு இருந்து வருகிறது.

பாஜக ஆதரவாளர் ஒருவர் காயத்ரி ரகுராமின் பெயரை குறிப்பிடாமல்,  ’இருந்தா இரு இல்லாட்டி போ’ என்று தெரிவித்திருந்தார்.  இதற்கு செல்வகுமார் என்ற அண்ணாமலையின் ஆதரவு நிர்வாகி,  லைக் போட்டிருந்தார் .  இதை அடுத்து அந்த பதிவை குறிப்பிட்டு,   ’செல்வகுமார் எப்போது பாஜக தலைவர் ஆனார்?’ என்று கேலி செய்திருந்தார் காயத்ரி ரகுராம். 

 தன்னை தமிழக பாஜக தலைவருக்கு எதிராக செயல்படுவது போல் சித்தரிப்பது ஏன்? என்று கேட்டிருந்தார்.   காசை வாங்கிக் கொண்டு அவர் போடும் கமெண்ட்களுக்கும் மூத்த தலைவர்களை திட்டி வேறு சிலர் போடும் கமெண்ட்களுக்கும் லைக் போடுங்கள் என்று அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் காயத்ரி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். 

 இதை அடுத்து பாஜக தலைவர்கள் லைக் மற்றும் ரீடுவிட் செய்ய காசு கொடுக்கிறார்கள் என்கிற உண்மையை காயத்ரி ரகுராம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் தமிழக பாஜகவில் இருந்து அவர் ஆறு மாதங்களுக்கு நீக்கப்படுவதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.  அதுவரைக்கும் காயத்ரி ரகுராமிடம் கட்சி நிர்வாகிகள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அண்ணாமலை குறிப்பிட்டிருக்கிறார். 

 இதற்கு காயத்ரி ரகுராம்,  அவர் ஆரம்பத்தில் இருந்து என்னை வெளியேற்ற வேண்டும் என்று விரும்பினார்.  அதை செய்து விட்டார்.  ஆனால் நான் வலுவாக திரும்பி வருவேன் என்று தெரிவித்திருக்கிறார்.