×

அண்ணாமலைதான் பைத்தியக்காரன் -காயத்ரி ரகுராம் கடும் தாக்கு

 

பைத்தியக்காரன், ஆபத்தான பயங்கரவாதி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்.

ஆடியோ விவகாரத்தில் அண்ணாமலையுடனான மோதல் முற்றி பாஜகவில் இருந்து வெளியேறி விட்டார் காயத்ரி ரகுராம்.   அதே ஆடியோ விவகாரத்தில் பாஜகவில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார் சூர்யா சிவா.  

இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் நான் போட்டியிட தயார்.  என்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என்று அண்ணாமலைக்கு சவால் விடுத்திருந்தார் காயத்ரி ரகுராம் .  இதற்கு சூர்யா சிவா,   நீ கூப்பிடுகிற இடத்துக்கெல்லாம் வருவதற்கு அவரை என்னன்னு நினைச்சீங்க?  தைரியம் இருந்தால் சவுக்கு சங்கர் மாதிரி உதயநிதியை எதிர்த்து நிற்பேன் என்று சொல்லு.   அதை விட்டுவிட்டு தேர்தலில் நிற்க விருப்பமில்லாதவரை வாருங்கள் நாம் தேர்தலில் போட்டியிடலாம் என்று சொல்வது சரியா என்று கேட்டிருந்தார்.  மேலும்,   திராணி இருந்தால் என்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க தயாரா? முதலில் என்கிட்ட வா? என்று அழைப்பு விடுத்திருந்தார்.

 இதனால் ஆத்திரமடைந்த காயத்ரி ரகுராம்,  அண்ணாமலைக்கு என்னுடன் பேச தைரியம் இல்லை ராஜினாமா செய்த அடியாளை அனுப்புகிறார் என்று கூறியிருந்தார். உடனே இதற்கு சூர்யா சிவா,  நான் ராஜினாமா செய்த அடியாள் என்றால் நீ டிஸ்மிஸ் செய்யப்பட்ட பைத்தியம்.  நீ போய் நிற்கிற இடத்தில் எல்லாம் அவர் வந்து நிற்பாரா? என்று ஆவேசப்பட்டிருந்தார்.

இதற்கு காயத்ரிரகுராம்,  ஒரு பைத்தியம் அல்லது மன அழுத்தம் உள்ளவர் அல்லது ஆபத்தான பயங்கரவாதி மட்டுமே மற்ற பயணிகளின் உயிரை பணயம் வைத்து ஓடும் விமானத்தின் கதவைத் திறப்பார்.  மேலும் ஒரு பைத்தியம் அல்லது மன அழுத்தம் உள்ளவர் அல்லது ஆபத்தான பயங்கரவாதி மட்டுமே தவறான செயல்களை பார்த்துக் கொண்டு அடுத்த இருக்கையில் ஜாலியாக அமர்ந்திருப்பார்.  யார் பைத்தியக்காரன், யார் ஆபத்தானவன், மற்றும் யார் பயங்கரவாதி என்று தமிழக மக்களுக்குத் தெரியும் என்று அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று இண்டிகோ விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்ற போது விமானத்தின் அவசர கால கதவை பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா திறந்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.   இது குறித்து விளக்கம் அளிக்க தேஜஸ்வி சூர்யாவுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.   தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில்தான் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் முன்னாள் பாஜக நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம்.