×

பாஜக தனித்து போட்டியிட தயார்? திமுக தயாரா?- அண்ணாமலை

 

பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அளித்த பேட்டியில், “அதிமுகவை பாஜக பயமுறுத்தி குளிர்காய்கிறது. தமிழ்நாட்டில் பாஜக பிரதான எதிர்க்கட்சி அல்ல. சொந்தக்காலில் நின்று அவர்களால் வெற்றி பெற முடியாது. அதிமுகவை பயமுறுத்தி, பணிய வைத்து அதில் குளிர்காய பாஜக நினைக்கிறது. மற்றபடி, தமிழ்நாட்டில் அவர்கள் வளரவில்லை. பாஜக வளராமல் பாஜகவினரே பார்த்துக் கொள்வார்கள். ஒன்றிய அளவில் ஆளும்கட்சியாக இருப்பதால் இங்கு பப்ளிசிட்டி தாராளமாக தரப்படுகிறதே தவிர,தமிழ்நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பலத்தை வைத்து அல்ல. தேர்தல் வெற்றிக்காக பாஜக எந்தவித இழிவான காரியத்தையும் செய்வார்கள்” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார். 

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது  அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திர கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளினுடனான கூட்டணியின் காரணமாகதான். 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே 1967லிருந்து, திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும், நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு மு.க.ஸ்டாலின் அவர்களே. யதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் மு.க.ஸ்டாலின். துணைப் பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும்

பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனி வரும் காலங்களில், அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் மு.க.ஸ்டாலின், கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.