×

"மக்களே திமுகவுக்கு செக் வைங்க.. எல்லாம் தானா நடக்கும்" - அண்ணாமலை கொடுத்த ஐடியா!

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. நாளையோடு பிரச்சாரம் ஓயவிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அதி தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை பாஜகவும் அதிமுகவும் தனித்து களம் காண்கின்றன. இரு கட்சி தலைவர்களும் தனித்தனியே பிரச்சாரம் செய்தாலும் ஆளும் திமுகவை தாக்கியே வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை செல்லுமிடமெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார்.

இன்று கடலூரில் பேசிய அவர், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் அவர். அப்போது பேசிய அவர், "தேர்தலின் போதும் திமுக அளித்த 517 வாக்குறுதிகளில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. 8 மாத காலமாக ஆட்சி நடத்தி வரும் ஒரு முதலமைச்சர், மக்களை நேரில் சந்திக்க தயங்கி பிரச்சாரத்திற்கே வராமல் காணொலி மூலம் பேசி வருகிறார்.  இதற்கு முன்பு தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த யாரும் இவரை போல் நடந்து கொண்டதில்லை. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்னையை ஏற்படுத்துகிறார்” என்றார். 

அதேபோல ராயபுரத்தில் பேசிய அவர், "பொங்கல் தொகுப்பில் உள்ள மஞ்சள் பை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ரூ.10 மதிப்புள்ள மஞ்சள் பையை ரூ.60க்கு வாங்கியுள்ளனர். 2.15 கோடி பைக்கு ரூ.130 கோடி கமிஷன் பெற்றுள்ளனர். சென்னை திமுகவின் கோட்டை என்பார்கள். அந்த கோட்டையில் பாஜக ஓட்டை போட்டுக் கொண்டிருக்கிறது.  நீங்கள் அவர்களுக்கு செக் வைத்தால் அவர்கள் தேர்தல் அறிக்கை படி உங்களுக்கு உடனே ஆயிரம் ரூபாய் பணம் தருவார்கள். நகை கடன் தள்ளுபடி செய்வார்கள். அனைத்து தேர்தல் அறிக்கைகயும் நிறைவேற்றுவார்கள்.  

இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. மக்கள் சேவைக்கான ஒரு தேர்தல். 5 சதவீதம் பேருக்கு நோய் தடுப்பு ஊசி போட்டு இன்று நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் பாரத பிரதமர் மோடி. இதற்கு தமிழக மக்கள் நன்றி சொல்ல வேண்டாமா? அந்த நன்றிக்காக நீங்கள் பாஜகவிற்கு வாக்களியுங்கள். பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று மாமான்றத்திற்கு சென்றால் அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள். கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளை வாங்கி தருவார்கள். அதனால் நீங்கள் அனைவரும் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.