×

ஊழல் இல்லாத கட்சி, ஊழல் செய்ய தெரியாத கட்சி பாஜக- அண்ணாமலை

 

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மஹாலில் விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விருதுநகர், அருப்புக்கோட்டை நகராட்சி மற்றும் மல்லாங்கினாறு, காரியாபட்டி பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் 69 பேரை அறிமுகப்படுத்தினார். 

அதன்பின் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் தான் ஆகிறது. விடியல் என்று சொல்லி வந்தார்கள், ஆனால் 80 ஆண்டுகள் ஆனது போல் நமக்கு சலிப்பு தட்டி விட்டது. திமுக அமைச்சர் மஸ்தான், அவரது மனைவிக்கு மாநகராட்சி உறுப்பினர் வேட்பாளர் சீட்டும், மகனுக்கு பேரூராட்சி உறுப்பினர் சீட்டும் கொடுத்து கொள்ளையடித்த பணத்தை குடும்பத்திற்குள் வைத்துக்கொள்ளும் கட்சி திமுக. ஆனால் பாஜக சேவை செய்பவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

ஊழல் இல்லாத கட்சி, ஊழல் செய்ய தெரியாத கட்சி பாஜக. திமுக தேர்தல் அறிக்கையில் 517 வாக்குறுதிகளில் 8 கூட நிறைவேற்றவில்லை. சாலையில் சென்று கொண்டிருந்தவரை அழைத்து நகையை கூட்டுறவு வங்கிகளில் வையுங்கள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்த உதயநிதி ஸ்டாலினை பார்க்க முடியவில்லை. அவர் சூட்டிங்கில் இருக்கிறார். அல்லது துபாயில் இருக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதால் மக்களை நேரில் சந்திக்க துணிவின்றி கம்ப்யூட்டரில் காணொளி காட்சி மூலம் வாக்கு பிரச்சாரம் செய்து வருகிறார். உங்கள் முன்னால் இருப்பது ஊழல் மலிந்த திமுகவா அல்லது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பாஜகவா என்பதை முடிவு செய்து வாக்களியுங்கள்” எனக் கூறினார்.