×

மோடியின் மேஜிக், நலத்திட்டங்கள், வளர்ச்சி, நேர்மை காரணமாக 4 மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி.. மத்திய அமைச்சர்

 

மோடியின் மேஜிக், நலத்திட்டங்கள், வளர்ச்சி மற்றும் நேர்மையின் காரணமாக உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றி குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது: பிரதமர் மோடியின் மேஜிக், நலத்திட்டங்கள், வளர்ச்சி மற்றும் நேர்மையின் காரணமாக உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. நெருக்கடியான நேரத்திலும் பிரதமர் மோடி மக்களுடன் இருந்தார் என்பதை இது காட்டுகிறது.

உத்தர பிரதேசத்தில் கட்சியின் இணை பொறுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பிரதமர் மோடி- முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பொதுமக்கள் விரும்புகின்றனர் என்பது மிகத் தெளிவாக தெரிந்தது. நான்கு மாநிலங்களில் தாமரை மலர்ந்தது 2024ல் பிரதமர் மோடியின் தலைமையில் மீண்டும் ஒருமுறை பா.ஜ.க. ஆட்சி அமையும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. மக்கள் அவருடன் (பிரதமர் மோடி) நிற்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 10ம் தேதியன்று பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் இருந்து கட்சி தொண்டர்களிடம் உரையாற்றுகையில், 2019ல் (மத்தியில்) நாம் ஆட்சி அமைத்தபோது, 2017ல் (உத்தர பிரதேசத்தில்) பெற்ற வெற்றிதான் இதற்கு காரணம் என்று நிபுணர்கள் சொன்னார்கள். 2022 தேர்தல் முடிவுதான் 2024 தேசிய தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் என்று அதே நிபுணர்கள் சொல்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.