பதவிக்கு ஆபத்து வரும் சமயங்களில் ஓபிஎஸ்-ஐ ஈபிஎஸ் இணைத்துக் கொள்வார்: அன்வர் ராஜா
இபிஎஸ் பதவிக்கு ஆபத்து வரும் நேரம் எல்லாம் ஓபிஎஸ்யை இணைத்துக் கொள்வார், நான் ஓபிஎஸ் அணியும் இல்லை இபிஎஸ் அணியும் இல்லை அதிமுககாரன் என முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா அதிமுகவின் 50 ஆண்டு நிறைவு தினத்தை ஒட்டி அவரது இல்லத்தில் அதிமுக ஆதரவாளர்கள் உடன் கொடியேற்றி பின்னர் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அன்னவர்ராஜா, “நான்கு அணிகளும் ஒன்றாக இணைந்தால் தான் அதிமுக வெல்ல முடியும், எல்லோருக்கும் பொதுவானவராக இருக்கும் தகுதி சின்னம்மா ஒருவருக்கு தான் இருக்கிறது. தன்னை எவ்வளவு புண்படும்படி பேசிய தலைவர்களை கூட சின்னம்மா இதுவரை அவர்களுக்கு எதிராக எந்த கருத்தையும் சொன்னதில்லை. யாருடைய மனம் புண்படும்படியும் அவர் பேசியது இல்லை. அந்த பண்பு சின்னம்மாவுக்கு தான் இருக்கிறது. எனவே அவருக்கு தான் அதிமுக கட்சியை தலைமை ஏற்கும் தகுதி இருக்கிறது.
சின்னம்மா சாதியை, இனத்தை பார்க்க மாட்டார் அவருடைய ஜாதியை சேர்ந்தவர்களுக்கா பதவி கொடுத்தார் ? ஜாதி, இனம் பார்க்காமல் பதவி கொடுத்தவர் சின்னம்மா. எனவே அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்று சேர வேண்டும். கட்சிக்கு சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும், இபிஎஸ் பதவிக்கு ஆபத்து வரும் சமயங்களில் ஓபிஎஸ்யை இணைத்துக் கொள்வார். மேலும் நான் ஓபிஎஸ், இபிஎஸ் எந்த அணியையும் சேர்ந்தவர் நான் அல்ல அண்ணா திமுககாரன்” எனக் கூறினார்.