×

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம்- 18ல் அறிவிக்கும் ஓபிஎஸ்

 

அதிமுக தற்போது ஓபிஎஸ் அணி,  இபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது.   ஆனால் ஓபிஎஸ் தரப்பினரோ தங்கள் அணிதான் உண்மையான அதிமுக என்று சொல்லி வருகிறது.   இபிஎஸ் அணியினரோ தங்கள் அணிதான் உண்மையான அதிமுக என்கிறது. 

 அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் என்று ஓபிஎஸ் இன்று வரைக்கும் சொல்லி வருகிறார்.  ஆனால் ஒருங்கிணைப்பாளர் பதவி அதிமுகவில் தற்போது இல்லை.  அதற்கு பதிலாக பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் பதவி தேவை கொண்டுவரப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கிறார் என்கிறது அவரது தரப்பு.  

 ஆனால் ,  தேர்தல் ஆணையம் இன்று வரைக்கும் ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்றுதான் ஏற்றுக் கொண்டிருக்கிறது.  தேர்தல் ஆணையம் கடிதங்களை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கு தான் அனுப்பி வைக்கிறது என்று சொல்கிறது ஓபிஎஸ் தரப்பு .  முதல்வர் மு. க . ஸ்டாலினும் கூட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

 இந்த நிலையில் புதிய நிர்வாகிகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.   மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை தொடர்ந்து நீக்கிக் கொண்டே வருகிறார் . இன்றைக்கு கூட இரண்டு பேரை நீக்கி அறிவிப்பு செய்துள்ளார்.  அதேபோல் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரையும் நீக்கம் செய்து அறிவித்து வெளியிட்டுள்ளார்.   இந்த நிலையில் நாளை மறுதினம் திங்கட்கிழமை 18ஆம் தேதி அன்று புதிய நிர்வாகிகள் நியமனம் பட்டியலை ஓபிஎஸ் வெளியிட இருக்கிறார் என்று தகவல் பரவுகிறது.

ஓபிஎஸ் ஆதரவாளர் கொவை செல்வராஜும் இன்றைய செய்தியாளர்கள் கூட்டத்தில் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓபிஎஸ் விரைந்து வீடு திரும்புவார் என்றும் சொல்லி யிருக்கிறார் கோவை செல்வராஜ்.