எடப்பாடி ஆளுமையான ஆளா? பயந்து பதுங்குவதான் ஆளுமையா? ஜெ., துணிச்சலில் ஒரு சதவிகிதம் இருக்குதா? எஸ்.பி.லட்சுமணன் விளாசல்
மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான எஸ்.பி. லட்சுமணன் நமது டாப்தமிழ்நியூஸ் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி இது. அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரம், சட்டப்போராட்டம், சதிவலைகள், பயந்து பதுங்கும் எடப்பாடியின் நிலைமை உள்ளிட்டவற்றை நம்மிடையே விரிவாக, தெளிவாக எடுத்துரைத்தார்.
அதிமுக பொதுக்குழு நாளை(11.7.2022) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. அதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட வழக்கில் தீர்ப்பு வரவிருக்கிறதே?
நீதிமன்றம் இறுதித்தீர்ப்பை சொல்லப்போவதில்லை. குறிப்பிட்ட மனு மீதுதான் தீர்ப்பு வழங்குகிறது. அதுவும் முடிவான முடிவல்ல. பொதுக்குழு நடத்தலாமா? நடத்தக்கூடாதா? நடத்தினால் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது. இல்லை, எந்த நிபந்தனையும் இல்லாமல் நடத்தலாமா? என்பது குறித்துதான் இந்த தீர்ப்பு வரப்போகிறது. அதன்பின்னரும் சட்டச்சிக்கல்கள் ஓயாது. யார் பாதிக்கப்பட்டாலும் பாதிக்கப்பட்வர் மேல்முறையீடு செய்யலாம். உச்சநீதிமன்றம் போகலாம். தேர்தல் ஆணையத்திற்கும் போகலாம்.
எடப்பாடி அணி செய்த கேலிக்கூத்துகளின் காரணமாக அவர்களே எழுப்பியிருக்கும் சிக்கல்தான் இது. அந்த 23 தீர்மானங்களை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லியிருந்தால் அது அப்போதே முடிந்திருக்கும். இல்லை, 24வது தீர்மானத்தை விவாதித்து முடித்துக்கொள்வோம் என்றும், அடுத்த பொதுக்குழுவில் தீர்மானமாக கொண்டுவருவோம் என்று சொல்லி இருந்தால் இவ்வளவு சட்டச்சிக்கல்கள் வந்திருக்காது. தனக்கு பலம் இருக்கிறது என்கிற எதேச்சதிகாரத்தில் எடப்பாடி எடுத்த சர்வாதிகார முடிவால்தான் இத்தனை சங்கடங்களும்.
உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டதே?
உச்சநீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு பொதுக்குழுவை நடத்தலாம் என்றுதான் சொல்லி இருக்கிறது. பொதுக்குழுவிற்கு தடை இல்லை என்றுதான் சொல்லி இருக்கிறது. உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாதுதான். ஆனால், பொதுக்குழுவில் திருப்தி இல்லை என்று ஒரு உறுப்பினர் நீதிமன்றம் சென்றால் அதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திற்கு இருக்கிறது.
ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடித்தார்கள். ஆனால் நீதிமன்றத்தில் காலாவதி ஆகவில்லை. அந்த பதவி காலியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா மரணத்தின்போதும், சசிகலா சிறை சென்றபோதும் கூடிய அவசர பொதுக்குழு போல் இப்போது நடத்த முயல்கிறார் எடப்பாடி. ஆனால், இப்போது எல்லோரும் உயிருடன் இருக்கிறோம் என்று ஓபிஎஸ் சொன்னதை, ஓபிஎஸ் வாதத்தை புறந்தள்ள விரும்பவில்லை நீதிபதி. காதுகொடுத்து கேட்டார். நீதிபதியின் கேள்விகளில் நியாயம் இருந்தது. ஆனால், தீர்ப்பு எப்படியும் வரலாம்.
ஓபிஎஸ்க்கு உதவி செய்வதற்காகத்தான் அதிமுக பொதுக்குழுவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகத்தான் எடப்பாடி அணிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் மத்திய அரசு ரெய்டு நடத்துகிறதா?மாநில அரசும் ஓபிஎஸ்க்கு சாதகமாக நடந்துகொள்கிறதா?
எடப்பாடிக்கு நெருக்கமான செய்யாதுரை வீட்டிலும், வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர் வீட்டிலும் நடந்தது வருமான வரித்துறை சோதனை. மத்திய அரசு சம்பந்தப்பட்டது. காமராஜ் வீட்டில் நடந்தது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார். இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் ஓபிஎஸ்க்கு ஸ்டாலின் சாதகமாக நடந்துகொள்கிறார் என்று சொல்வதா? இது ஸ்டாலின் செய்த தாமதாமன நடவடிக்கை. காக்கா உட்கார பனம்பழம் விழுந்தது என்கிறார்கள். ஓபிஎஸ் சொல்லித்தான் இந்த ரெய்டு நடந்தது என்றால், இதற்கு முன்னாடி தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு எல்லாம் ஓபிஎஸ் சொல்லித்தான் நடந்ததா? அப்போதுதான் நீங்க இரட்டைக்குழல் துப்பாக்கியாக இருந்தீங்களே?
மத்திய அரசின் அழுத்தம் இதில் இல்லையா?
எடப்பாடி ஆளுமையான ஆள் என்று சொல்கிறார்கள். அதனால் அவர் தலைமையில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இப்போது கட்சியே அவர் பின்னாடி இருப்பதாக சொல்கிறார்களே. ரெய்டு மூலம் மத்திய அரசு எங்களை பலவீனப்படுத்துகிறது. ஒபிஎஸ்க்கு மறைமுகமாக உதவி செய்கிறது என்று எடப்பாடியும் அவரது தரப்பும் ஏன் சொல்லவில்லை. ஏன் பயந்து பதுங்குறாங்க. ஸ்டாலினை மட்டும் விமர்சிக்கிறாங்க. மத்திய அரசை ஏன் விமர்சிப்பதில்லை. இது என்ன ஆளுமை. ஜெயலலிதாவிடம் இருந்த துணிச்சலில் ஒரு சதவிகிதமாகவது எடப்பாடியிடம் இருக்கிறதா? ஜெயலலிதா கட்டிக்காத்த இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக இவ்வளவு சூழ்ச்சி, இவ்வளவு நம்பிக்கை துரோகம், இவ்வளவு வேகம். ராஜதந்திரம் எல்லாவற்றையும் பயன்படுத்துறாங்க. ஆனா, அந்த ஜெயலலிதாவின் துணிச்சலில் ஒரு சதவிகிதமாவது எடப்பாடியிடம் இல்லையே.
மேலும், முழு காணொளி பேட்டியை காண...