நரேந்திர மோடிக்கு பிறகு சோனியா காந்தியை பிரதமராக்க பா.ஜ.க. திட்டம்.. அரவிந்த் கெஜ்ரிவால்
நரேந்திர மோடிக்கு பிறகு சோனியா காந்தியை பிரதமராக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு குஜராத்தில் ஆம் ஆத்மி விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கில் செலவழிக்கிறது என்று காங்கிரஸ் அண்மையில் குற்றம் சாட்டியுள்ளது. சமூக ஆர்வலர் மேதா பட்கரை குஜராத்தின் முதல்வராக்க ஆம் ஆத்மி விரும்புகிறது என்று பா.ஜ.க. தெரிவித்து இருந்தது. இந்நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்கு கடந்த திங்கட்கிழமையன்று சென்றார். கடைசி நாளான நேற்று அகமதாபாத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரஸின் குற்றச்சாட்டு மற்றும் பா.ஜ.க. கருத்து குறித்து கெஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: காங்கிரஸ் முடிந்து விட்டது. அவர்களின் கேள்விகளை எடுப்பதை நிறுத்துங்கள். மக்கள் இதைப் பற்றி தெளிவாக இருக்கிறார்கள். அவர்களின் கேள்விகளை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. நரேந்திர மோடிக்கு பிறகு சோனியா காந்தியை பிரதமராக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக நான் கேள்விப்பட்டேன். அவர்களிடம் (பா.ஜ.க.) இந்த கேள்வியை கேளுங்கள். எதிர்வரும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மாநில மக்களுக்கு ஊழலற்றி ஆட்சியை வழங்குவோம்.
நான் குஜராத்தில் யாரை சந்தித்தாலும் எல்லா இடங்களிலும் ஊழல் இருக்கிறது என்று தெரிவித்தனர். ஒரு அரசு வேலை செய்ய லஞ்சம் கொடுக்க வேண்டும். கீழ் மட்டத்தில் ஊழல் இருக்கிறது, மேல் மட்டத்திலும் ஊழல்கள் உள்ளன. இதற்கு எதிராக ஒருவர் பேசினால், அவர் அச்சுறுத்தப்படுவார். குஜராத்தில் எங்கு பார்த்தாலும் ஊழலும், குண்டர்த்தனமும் இருக்கிறது. ஆம் ஆத்மி அரசு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் ஒவ்வொரு பைசாவும் குஜராத் மக்களின் சேவைக்கு செல்வதை உறுதி செய்யும். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.