×

இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்குவது இலவசம் அல்ல.. பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்..

 

இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்குவது இலவசம் அல்ல என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையுடன் இணைக்கும் வகையில் ரூ.14,850 கோடி மதிப்பில் 296 கிலோ மீட்டர் தொலைவுக்கு போடப்பட்டுள்ள பந்தல்கண்ட் எக்ஸ்பிரஸ்வே சாலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இலவசங்களை வாக்குறுதி அளித்து வாக்குகளை பெறும் ரேவடி (ரேவடி என்பது இனிப்பு பலகாரம்) கலாச்சாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது இது குறித்து மக்கள் குறிப்பாக இளைஞர்க்ள எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். பிரதமரின் இலவச வாக்குறுதிகள் குற்றச்சாட்டுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்தார். 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: நம் நாட்டுக் குழந்தைகளுக்கு இலவச கல்வி, நல்ல கல்வியை கொடுப்பதும், மக்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதும் இலவச ரேவடி விநியோகம் என்று சொல்லப்படுவதில்லை. வளர்ந்த மற்றும் பெருமை வாய்ந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்து வருகிறோம். இந்த பணி 75 ஆண்டுகளுக்கு  முன்பே செய்திருக்க வேண்டும். ககன் என்ற பையன் இருக்கிறான், அவனது தந்தை கூலி வேலை செய்து வந்தார். மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதித்து வந்த ககனின் தந்தை, ஊரடங்கின் போது வேலையை இழந்தார். இன்று தன்பாத் ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் ககன் அனுமதி பெற்றுள்ளார். நான் இலவச ரேவடிகளை விநியோகம் செய்கிறேனா அல்லது இந்த நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புகிறேனா என்று அவரிடம் கேளுங்கள். 

இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்குவது இலவசம் அல்ல ஆனால் நண்பர்களின் கடன்களை தள்ளுபடி செய்வது இலவச ரேவடி என்று அழைக்கப்படுகிறது. ரேவடிகள் விநியோகம் செய்து இலவசம் கொடுப்பது யார் என்பதை நான் சொல்கிறேன். இந்த நண்பர்களின் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்வதும், நண்பர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் மூலம் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை பெறுவதும் இலவசங்களை வழங்குவதாகவும். கெஜ்ரிவால் இலவச ரேவடிகளை விநியோகிக்கிறார் என்று என்னை தவறாக சொல்கிறார்கள். டெல்லியை சேர்ந்த 18 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை மற்றும் நடுத்தர குழந்தைகளுக்கு எங்கள் அரசு பள்ளிகளில் சிறந்த கல்வியை இலவசமாக வழங்குகிறேன். நான் நாட்டை கேட்க விரும்புகிறேன்? நான் இலவச ரேவடிகளை விநியோகம் செய்கிறேனா அல்லது இந்த நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குகிறேனா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.