காங்கிரஸ் வேட்பாளராக ப. சிதம்பரம் தேர்வு
காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்திற்கான வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப .சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுகவுக்கு இரண்டு இடங்களும் கிடைத்தது. இதில் திமுக மூன்று இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்தை கூட்டணி கட்சியில் இருக்கும் காங்கிரசுக்கு ஒதுக்கியது.
காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட அந்த ஒரு இடத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுவார் அல்லது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பா.சிதம்பரமா? கே. எஸ். அழகிரியா? என்ற கேள்வி எழுந்தபோது, அது குறித்து கே. எஸ். அழகிரி இடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, சிதம்பரத்திற்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்று அவரே சொல்லியிருந்தார்.
அப்போதே காங்கிரசின் மாநிலங்களவை எம்பி வேட்பாளர் ப. சிதம்பரம் தான் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய ப. சிதம்பரம், சென்னையில் உள்ள தனது வீட்டில் 10 எம்எல்ஏக்களின் கையெழுத்துடன் வேட்பு மனுவைத் தயார் செய்துள்ளார் என்று தகவல் பரவியது. விரைவில் காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது என்றும் தகவல் பரவியது.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வரும் வரும் வாரத்தில் தலைமைச் செயலகம் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்யவிருக்கிறார்.