×

உ.பி.யில் அங்கீகரிக்கப்படாத  மதரஸாக்கள் கணக்கெடுப்பு.. முஸ்லிம்களை துன்புறுத்த விரும்புகிறார்கள்- ஓவைசி குற்றச்சாட்டு

 

உத்தர பிரதேசத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் கணக்கெடுப்பை நடத்த யோகி அரசு முடிவு செய்துள்ளதை குறிப்பிட்டு, பா.ஜ.க. அரசு முஸ்லிம்களை துன்புறுத்த விரும்புகிறார்கள் என்று அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு, அம்மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸாக்களின் கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது.  அங்கீகரிக்கப்டாத மதரஸாக்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை, பாடத்திட்டம் மற்றும் எந்த அரசு சாரா நிறுவனத்துடன் தொடர்பு  போன்ற தகவல்களை கண்டறிய இந்த கணக்கெடுப்பை நடத்த உள்ளது. 

உத்தர பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு அசாதுதீன் ஓவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஓவைசி கூறுகையில், மதரஸாக்கள் 30வது பிரிவின்படி உள்ளன, பிறகு ஏன் உத்தர பிரதேச அரசு கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டது? இது ஒரு கணக்கெடுப்பு அல்ல மினி என்.ஆர்.சி. (தேசிய குடிமக்கள் பதிவேடு). சில மதரஸாக்கள் உத்தர பிரதேச மதரஸா வாரியத்தின் கீழ் உள்ளன. சட்டப்பிரிவு 30ன் கீழ் எங்களின் உரிமைகளில் மாநில அரசு தலைமையிட முடியாது, அவர்கள் (பா.ஜ.க. அரசு) முஸ்லிம்களை துன்புறுத்த விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போது மொத்தம் 16,461 மதரஸாக்கள் உள்ளன. அம்மாநிலத்தில் உள்ள மொத்த மதரஸாக்களில் 560 மதரஸாக்களுக்கு  அரசு மானியங்கள் வழங்கப்படுகின்றன. அதேநேரத்தில் மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக புதிய மதரஸாக்கள் மானிய பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.