×

குஜராத்தில் பொது சிவில் சட்டம்.. வாக்குகளை பெறுவதற்கான பா.ஜ.க.வின் தந்திரம்.. அசாதுதீன் ஓவைசி

 

குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான  பா.ஜ.க. முயற்சி தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான தந்திரம் என்று அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டினார்.

முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அங்கு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒரு குழுவை கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைத்தது. இந்த குழு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று அல்லது நான்கு பேர் கொண்டதாக இருக்கும் என தகவல்.

குஜராத் பா.ஜ.க. அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவரும், ஹைதரபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் கூறியதாவது: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காகவும், இந்துத்துவா செயல்திட்டத்தை முன்வைப்பதற்காகவும் பா.ஜ.க. பொது சிவில் சட்டம் விவகாரத்தை எழுப்புகிறது. 

இந்து பிரிக்கப்படாத குடும்பத்திற்கான வருமான வரி சலுகைகளில் இருந்து முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களை விலக்கினால் சமத்துவக் கொள்கைக்கு எதிரானது இல்லையா? இவ்வாறு அவர் தெரிவித்தார். குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பா.ஜ..க. தான் ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.